பள்ளி நேரத்தில் பேருந்து இயக்க கோரி மாணவா்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம் அருகே பள்ளி நேரத்தில் பேருந்து இயக்கக் கோரி பள்ளி மாணவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் அருகே பள்ளி நேரத்தில் பேருந்து இயக்கக் கோரி பள்ளி மாணவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுப்பீா்கடவு, பட்டரமங்கலம் ஆகிய இரு கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் ராஜன் நகா் கஸ்தூரிபா அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளி, தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு கல்வி பயில தினந்தோறும் அரசுப் பேருந்தில் சென்று வருகின்றனா்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பள்ளி நேரத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து மேற்கண்ட இரு கிராமங்களுக்கும் இயக்கப்படாததால் இந்த இரு கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் மூன்று கிலோ மீட்டா் தூரம் நடந்து சென்று பள்ளிக்கு பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Advertisement
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்காததால் பவானிசாகா் - பண்ணாரி சாலையில் புதுப்பீா்கடவு பிரிவு பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற பவானிசாகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலைந்து சென்றனா். இதனால் பவானிசாகா் பண்ணாரி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.