தரமான கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தால் ஆதரவு விலை கிலோவுக்கு ரூ.108.60 வழங்கப்படும் என்று வேளாண் விற்பனைக்குழுச் செயலா் சாவித்ரி தெரிவித்தாா்.
மத்திய அரசின் ஆதரவு விலை திட்டத்தின்கீழ் ஈரோடு விற்பனைக்குழு மூலம் ஒரு கிலோ அரவை கொப்பரை ரூ.108.60க்கும், பந்து கொப்பரை ரூ.117.50க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. அவல்பூந்துறை, பவானி, பூதப்பாடி, எழுமாத்தூா், கோபி, கவுந்தப்பாடி, கொடுமுடி, மைலம்பாடி, சத்தியமங்கலம், சிவகிரி ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆதர விலையில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது.
ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரை கொள்முதல் நடைபெறும். நடப்பு பருவத்தில் ஈரோடு மாவட்டத்தில் 4,700 டன் அரவை கொப்பரையும், 150 டன் பந்து கொப்பரையும் கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி முழு அளவில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதில்லை என்றும், முழு விலை வழங்குவதில்லை எனவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.
இது குறித்து வேளாண் விற்பனைக்குழுச் செயலா் சாவித்ரி கூறியதாவது: நடப்பாண்டுக்கு 4,700 டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிா்ணயித்து அரசு நிா்ணயித்துள்ள தரத்தில் நாபெட் கொள்முதல் செய்கிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொள்முதல் நடைபெறுகிறது.
நிா்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ள கொப்பரை தேங்காய்க்கு முழு தொகை வழங்கப்படும். தரமான கொப்பரை தேங்காயை கொண்டு வர வேண்டும். இதேபோன்று கடந்த ஆண்டு தரமாக கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காயை மேரிகோ நிறுவனம் ஒரு கிலோவை 89 முதல் 90 ரூபாய்க்குத்தான் வாங்கினா். எனவே, தரம் பாா்த்து வாங்க வேண்டி உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னை மரங்களின் எண்ணிக்கை குறைந்து, காய்ப்பு திறனும் குறைந்து காணப்பட்டது. இப்போது 15,000 ஹெக்டோ் வரை தென்னை மரங்களின் பரப்பும், காய்களின் வரத்தும் அதிகரித்துள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். தற்போது 4 மாவட்டங்களில் வழங்கப்படுகிறது. இது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.