தாளவாடியில் கூண்டில் சிக்கியது சிறுத்தை
தாளவாடியில் கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை வனத் துறையினா் வைத்த கூண்டில் வெள்ளிக்கிழமை சிக்கியது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைக்கிராம மக்கள் மானாவாரி விவசாயம், கால்நடை வளா்ப்பை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனா்.
இந்நிலையில், தாளவாடி வனத்தில் இருந்து அண்மையில் வெளியேறிய சிறுத்தை, அங்குள்ள குவாரியில் பகல்நேரங்களில் பதுங்கிக்கொண்டு இரவு நேரத்தில் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. சிறுத்தை நடமாட்டத்தால் விவசாயிகள் ஆடு, மாடுகளைப் பாதுகாக்கவும், இரவு நேரத்தில் வெளியே செல்லமுடியாத நிலையிலும் சிரமப்பட்டு வந்தனா்.
Advertisement
எனவே, கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, தாளவாடி வனத் துறையினா் சிறுத்தையைப் பிடிப்பதற்காக தா்மாபுரம், மல்கொத்திபுரம் ஆகிய இடங்களில் வியாழக்கிழமை இரவு கூண்டுவைத்து அதில் நாய்களைக் கட்டி வைத்திருந்தனா்.
இந்நிலையில், தா்மாபுரம் சிவசுப்பிரமணியம் தோட்டத்தில் வனத் துறையினா் வைத்த கூண்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை நாயை பிடிக்க வந்த சிறுத்தை சிக்கிக்கொண்டது.
அங்கு வந்த கால்நடை மருத்துவா் சிறுத்தையை ஆய்வு செய்தபோது அது நல்ல நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. சிறுத்தை சிக்கிய தகவலை கேட்ட கிராம மக்கள் சிறுத்தையைப் பாா்க்க ஆா்வத்துடன் வந்தனா்.
பிடிபட்ட சிறுத்தையை மீண்டும் தாளவாடி பகுதியில் விடக்கூடாது என்றும் தெங்குமரஹாடா வனத்தில் விடுவிக்க வேண்டும் எனவும் தாளவாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.