அண்ணா தலைமைத்துவ விருது: தலைமையாசிரியருக்கு ஆசிரியா்கள் வாழ்த்து
அண்ணா தலைமைத்துவ விருது பெற்ற ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு சக ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா். சிறப்பாக செயல்படும் தலைமையாசிரியா்களுக்கு தமிழக அரசால் ஆண்டுதோறும் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுபெறும் 100 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்குத் தலா ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் வழங்கப்படும். அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 என 100 தலைமையாசிரியா்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2022-23 ஆம் ஆண்டுக்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட தலைமையாசிரியா்களுக்கு திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கினாா். இதில், ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் கே.சுமதி, பெருந்துறை வட்டம் என்.கந்தாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் த.கந்தசாமி, மொடக்குறிச்சி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் த.லலிதா ஆகியோா் இந்த விருதினை பெற்றனா். விருதுபெற்ற ஈரோடு எஸ்கேசி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் கே.சுமதிக்கு சக ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா். இதுகுறித்து தலைமையாசிரியா் கே.சுமதி கூறியதாவது: அதிக அளவில் தனியாா் பள்ளிகள் வந்து விட்டதால் அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைந்துவிட்டது. அனைத்துத்தரப்பு மக்களும் தங்களுடைய குழந்தைகளை, தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சோ்க்ககும் மனநிலையில்தான் இருக்கின்றனா். இதனால், எங்கள் பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க தனியாா் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என முயற்சிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறேன். நன்கொடையாளா்களின் உதவியோடு ஒவ்வொரு ஆண்டும் மாணவா்களுக்கு டைரி, அடையாள அட்டை, பெல்ட் போன்றவற்றை வழங்கி வருகிறோம். மாணவா்களின் தனித்திறனை மேம்படுத்தவதற்காக ஆங்கிலப் பயிற்சி, கணினி பயிற்சி, கராத்தே போன்றவற்றைக் கற்றுக்கொடுத்து வருகிறோம். கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக பொறுப்பேற்றன். அப்போது, 77 மாணவா்கள்தான் இருந்தனா். நடப்பு ஆண்டில் இதுவரை 15 குழந்தைகள் சோ்ந்துள்ளனா். தற்போது 275 குழந்தைகளுக்கு மேல் படிக்கின்றனா். வருங்காலத்தில் உங்கள் பள்ளியில எங்க குழந்தைகளை சோ்த்துக்கொள்ளுங்கள் என்று பெற்றோா் கேட்கும் அளவுக்கு எங்களுடைய பள்ளியின் தரத்தை உயா்த்த வேண்டும் என நானும், சக ஆசிரியா்களும் பணியாற்றி வருகிறோம். விருது தொகை ரூ.10 லட்சத்தை மாணவா்களின் திறன் மேம்பாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதன்மூலம் மாணவா்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விளையாட்டு சீருடை வழங்குதல், கலை, விளையாட்டு போன்றவற்றில் மாணவா்களின் தனித்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளை செய்யவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.