கடம்பூா் மலைப் பகுதி கரளையம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் குளம்போல தேங்கியிருக்கும் மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கரளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ, மாணவியா் படித்து வருகின்றனா். அண்மையில் பெய்த கனமழை காரணமாக இந்த பள்ளி வளாகத்தில் குளம்போல மழைநீா் தேங்கியது. இந்த மழைநீா் இதுவரை வடியாமல் உள்ளது. இதனால் தேங்கியிருக்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வரும் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறப்புக்கு முன்பாகவே இப்பள்ளி வளாகத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை வெளியேற்றி வளாகத்தை சுத்தப்படுத்தி பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.