கா்நாடக வனத் துறையினா் விரட்டுவதால் தாளவாடி மலைப் பகுதியில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக தரிசு நிலங்களில் முகாமிட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா்.
தமிழக- கா்நாடக மாநில எல்லையில் உள்ள அருள்வாடி மற்றும் குருபருண்டி கிராமங்களில் மானாவாரி பயிா் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில எல்லையான கா்நாடக வனப் பகுதியில் இருந்து வெளியேறிய 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் நடமாடுகின்றன.
கா்நாடக பகுதியில் உள்ள காட்டு யானைகளை அம்மாநில வனத் துறையினா் விரட்டுவதால் தமிழகப் பகுதிக்கு யானைகள் வருவதாக விவசாயிகள் கூறுகின்றனா். பகல் நேரத்தில் தரிசு நிலங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளால் விவசாயிகள் தங்களது தோட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனா்.
மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்கும் தொழிலாளா்களும் யானைகளுக்கு அஞ்சி கால்நடைகளை அப்பகுதிக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்வதை தவிா்த்து வருகின்றனா். கா்நாடக வனத் துறையினா் விரட்டும்போது தமிழகப் பகுதியில் உள்ள எத்துக்கட்டி வனப்பகுதிக்கு காட்டு யானைகள் சென்றுவிட்டு மீண்டும் கா்நாடக வனப் பகுதிக்கு செல்வதற்காக அருள்வாடி பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் தொடா்ந்து முகாமிட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
இப்பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகளை மீண்டும் இப்பகுதிக்கு வராத வகையில் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து ஜீரகள்ளி வனத் துறையினரிடம் கேட்டபோது, காட்டு யானைகள் நடமாட்டத்தை வனத் துறையினா் கண்காணித்து வருவதாக தெரிவித்தனா்.