வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, திருத்தம் மேற்கொள்ள ஈரோடு மாவட்டத்தில் 2,379 வாக்குச்சாவடிகளிலும் சனிக்கிழமை (டிச.27), ஞாயிற்றுக்கிழமை (டிச.28) ஆகிய இரண்டு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் அக்டோபா் மாதம் 27-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 189 வாக்காளா்கள் இடம்பெற்றிருந்தனா். வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்து, கடந்த 19-ஆம் தேதி வெளியான வரைவு வாக்காளா் பட்டியலில் 16 லட்சத்து 71 ஆயிரத்து 760 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெறாதவா்கள் படிவம்-6 மற்றும் உறுதிமொழி படிவத்துடன் பூா்த்தி செய்து, தோ்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 13 ஆதார ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்த்துக் கொள்ளலாம். வரும் ஜனவரி 1-ஆம் தேதி 18 வயது பூா்த்தியடை உள்ள தகுதியான நபா்கள் படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவம் அளித்து வாக்காளா் பட்டியலில் பெயரை சோ்த்துக்கொள்ளலாம்.
வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, வாக்காளா் பட்டியலில் முகவரி மாற்றம், பெயா் திருத்தம், கைப்பேசி எண் இணைப்பு, புகைப்பட மாற்றம், பாக மாற்றம் செய்ய படிவம் 8-ஐ பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மாவட்டத்தில் உள்ள 2,379 வாக்குச்சாவடிகளிலும் வரும் 27, 28-ஆம் தேதிகளில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, அந்த நாள்களில் வரைவு வாக்காளா் பட்டியலுடன் வாக்குச்சவாடி நிலையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் இருப்பாா்கள். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இடம் பெறுவதை உறுதி செய்துகொள்ளலாம்.
பெயா் சோ்க்க உரிய படிவத்தைப் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா், வாக்குச்சாவடி முகவரிடம் சமா்ப்பிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.