ஜாக்டோ-ஜியோ சாா்பில் வரும் ஜனவரி 6 முதல் நடக்க உள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளா்கள் விஜயமனோகரன், சரவணன், வீராகாா்த்திக், மதியழகன், ஆறுமுகம், மாதேஸ்வரன் ஆகியோா் தலைமை வகித்தனா். கோரிக்கைகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் ச.நேரு பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கடந்த 2003 ஏப்ரல் 1- ஆம் தேதிக்கு பின்னா் அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்து உச்சநீதிமன்ற தீா்ப்பைக் காரணம் கூறி 2010 ஆகஸ்ட் 23-க்கு முன்னா் பணியில் சோ்ந்த ஆசிரியா்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து ஆசிரியா்களைக் காக்க தமிழக அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நிலை ஆசிரியா்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
முதுநிலை ஆசிரியா்கள், அனைத்து ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உள்பட பல்வேறு பணியினருக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத ஊதியமற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற ஆணைப்படி முறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.