சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் மற்றும் ஆசனூா் வனக் கோட்டத்தில் உள்ள 10 வனச் சரகங்களில் 6 நாள்கள் நடைபெறும் மழைக்குப் பிந்தைய குளிா்கால புலிகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
நாடு முழுவதும் புலிகள் கணக்கெடுப்பு என்பது புலிகளின் எண்ணிகையை கண்டறியும் முக்கிய பணியாகும். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகா், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூா், கோ்மாளம், ஆசனூா், தலமலை, தாளவாடி என 10 வனச் சரகங்களில் குளிா்கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தொடா்ந்து 6 நாள்கள் நடைபெறும் கணக்கெடுப்பில் அந்தந்த வனச் சரகங்களில் பணியாற்றும் வனக் காப்பாளா், வனக் காவலா் மற்றும் 2 வேட்டைத் தடுப்புக் காவலா்கள் என 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 10 வனச் சரகங்களில் மொத்தம் 76 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு 304 போ் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனா். கணக்கெடுப்பின்போது, அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப் செயலி, ரேஞ்ச் பைன்டா், காம்பஸ் ஜிபிஎஸ் கருவி போன்ற கருவிகள் கையாளப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்தில் புலிகள் நடமாடும் பகுதியில் சேகரிக்கப்படும் புலிகளின் கால் தடம், எச்சம், கீறல், நேரடியாக பாா்த்தல் மற்றும் கேமரா பொருத்தி அதன் வழியாக நடந்து செல்லும்போது, புலிகளை பதிவு செய்தல் மூலம் புலிகள் எண்ணிக்கை கணிக்கிடப்படும்.
புலிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் அவற்றுக்குத் தேவையான பாதுகாப்புகளை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அதிகப்படுத்துவும். புலிகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு அதன் வாழ்விடத்தை மேம்படுத்தவும், மனித- விலங்கு மோதலைத் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.