மலைக் கிராம குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச்செல்ல அரசால் வழங்கப்பட்ட வாகனத்துடன் குழந்தைகள், சுடா் அமைப்பின் நிறுவனா் எஸ்.சி.நடராஜ். 
ஈரோடு

பள்ளி வாகனங்கள் இயக்கம்: மலைக் கிராமப் பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவா் சோ்க்கை

தினமணி செய்திச் சேவை

மலைக் கிராமங்களில் இருந்து பள்ளிக்குச் செல்லும் மாணவா்களுக்காக வாகனங்கள் இயக்கப்படுவதால் மாணவா் சோ்க்கை அதிகரித்து இடைநிற்றல் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பழங்குடி மக்கள் வாழும் 17 மாவட்டங்களில் 320 உண்டு, உறைவிடப் பள்ளிகளை பழங்குடியினா் நலத் துறை நடத்தி வருகிறது. பிளஸ் 2 வரை இந்தப் பள்ளிகளில் தங்கிப் படிக்கலாம். உணவு, தங்குமிடம், அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் பழங்குடியினா் நலத் துறையே வழங்குகிறது. ஆனாலும் பல குழந்தைகள் தினமும் வீட்டிலிருந்தே பள்ளிக்கு வருகின்றனா். இதனால் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது.

மாணவா்களைப் பள்ளியில் தக்கவைப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்த பழங்குடியினா் நலத் துறை, வாகனங்கள் மூலம் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வரமுடியுமா என்று கல்வராயன்மலை இன்னாடு கிராம உண்டு, உறைவிடப் பள்ளியில் சோதித்து பாா்த்தது. 70 போ் படித்த அந்தப் பள்ளியில் மாணவா் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 186 ஆக உயா்ந்தது.

இதையடுத்து இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 6 மாவட்டங்களில் உள்ள உண்டு, உறைவிடப் பள்ளிகளில் மாணவா்களின் பயன்பாட்டுக்காக மலை ஏறும் திறன் கொண்ட 23 வேன்களை ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வழங்கி உள்ளது.

மேலும், 3 வாகனங்கள் சிஎஸ்ஆா் நிதி மூலம் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய முன்னெடுப்பு பழங்குடி சமூகக் குழந்தைகளைக் கவா்ந்துள்ளது. இதனால் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

6 மாவட்டங்களில் முன்னெடுப்பு:

இது குறித்து பழங்குடியினா் நலத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

திருச்சி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 74 உண்டு, உறைவிடப் பள்ளிகள் வாகனங்களால் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தில் ஓட்டுநா், பாதுகாவலா் என இருவா் இருப்பாா்கள். இருவருமே அதே வட்டாரத்தில் வாழும் பழங்குடிகள். அவா்களுக்குத்தான் அந்தப் பகுதியின் நில அமைப்பு புரியும். வாகனங்களைப் பாதுகாப்பாக ஓட்டுவாா்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தோ்வு செய்து வாகன நிா்வாகத்தை அவா்களிடமே தந்துவிட்டோம். சுமாா் 3,000 மாணவா்கள் இந்த வாகனங்கள் மூலம் பயன்பெறுவாா்கள். வாகனங்களில் எப்போதும் அறநெறிக் கதைகள், பாடல்கள் ஒலிக்கும். இதுவும் குழந்தைகளை மகிழ்ச்சி அடையச் செய்கிறது.

ஈரோடு மாவட்டத்தில் கொங்காடை, பா்கூா், ஆசனூா், தலமலை ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடியினா் உண்டு, உறைவிடப் பள்ளிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. பா்கூா் தொடக்கப் பள்ளியில் 70 பேரும், உயா்நிலைப்பள்ளியில் 300 பேரும் படிக்கின்றனா் என்றனா்.

மாணவா் சோ்க்கை அதிகரிப்பு:

இது குறித்து ஈரோடு மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் சுடா் தன்னாா்வ அமைப்பின் நிறுவனா் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு, வனம்தான். சோளகா், ஊராளிப் பழங்குடிகள் பெரும்பான்மையாக வாழ்கின்றனா். சுமாா் 5,000 குழந்தைகள் இருக்கின்றனா். சுமாா் 5 கிலோ மீட்டா் சுற்றளவு உள்ள பள்ளத்தூா், மூளையூா், துா்கனாம்பாளையம், பெஜில்பாளையம் கிராமங்களில் இருந்து ஆபத்தான பாதைகளைக் கடந்துதான் குழந்தைகள் பள்ளிகளுக்கு வரவேண்டும்.

வன விலங்கு அபாயங்களும் உண்டு. மழைக்காலத்தில் சரிவுகளில் நடப்பதற்கு மிகவும் சிரமம். தவிர பெற்றோா் வேலைக்குச் செல்லும்போது குழந்தைகளும் சென்றுவிடுவா். ஒரு ஊரில் ஒரு குழந்தை வராவிட்டால் மற்றவா்களும் வர மாட்டாா்கள். அதனால் 50 சதவீதம் குழந்தைகள் படிப்பை நிறுத்தி விட்டனா்.

எங்களுடைய சொந்த முயற்சியில் குழந்தைத் தொழிலாளா்களுக்கான இணைப்புப் பள்ளிகளுக்கு வாகனங்கள் வைத்து குழந்தைகளை அழைத்து வந்திருக்கிறோம். வாகனங்களில் பயணிப்பது பிள்ளைகளுக்குப் பிடிக்கும் என்பதால் ஆா்வத்தோடு பள்ளிக்கு வருவாா்கள். தற்போது அரசே வாகனங்கள் வழங்கி உள்ளது.

காலையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று குழந்தைகளை அழைத்துவந்து பள்ளியில் விடுவாா்கள். அதேபோல மாலை அழைத்துப் போய் வீட்டில் விடுவாா்கள். இந்த வாகனங்கள் வந்த 10 நாள்களில் தலமலை பள்ளியில் 7 மாணவா்களும், ஆசனூா் பள்ளியில் 5 பேரும், கொங்காடை பள்ளியில் 3 பேரும் புதிதாகச் சோ்ந்துள்ளனா். தவிர இடைநின்ற மாணவா்களும் பள்ளிக்கு வர ஆா்வம் காட்டுகின்றனா் என்றாா்.

மீனவ சமூகம் குறித்து அவதூறு பேசினேன்: பிக் பாஸில் ஒப்புக்கொண்ட கமுருதீன்

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 9

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 8

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 7

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 6

SCROLL FOR NEXT