ஈரோடு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி திங்கள்கிழமை (நவம்பா் 3) தொடங்குகிறது.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி அளவில், வட்டார அளவில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன. இதில் பேச்சு, கட்டுரை, நடிப்பு, ஓவியம் வரைதல், குழு நடனம், தனி நபா் நடனம், கிராமிய இசை, இசைக் கருவிகள் வாசித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறனை வெளிப்படுத்தினா்.
பள்ளி, வட்டார அளவிலான போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி திங்கள்கிழமை தொடங்கி நடைபெறவுள்ளது. வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவா்கள் இப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஈரோடு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. பெருந்துறை நந்தா கலை அறிவியல் கல்லூரியில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கும், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு அந்தியூா் ஐடியல் பள்ளியிலும் திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை போட்டிகள் நடைபெறுகின்றன.
1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கோபி பாரதி வித்யாலயாவில் வரும் 6 மற்றும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதேபோன்று 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு வரும் 6 மற்றும் 7-ஆம் தேதி பெருந்துறை நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது என்றனா்.