வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களிடம் இருந்து கணக்கீட்டுப் படிவத்தை அந்தந்தப் பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலா்களே திரும்பப்பெற வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆட்சியா் ச.கந்தசாமியிடம் முன்னாள் அமைச்சா்களும் அதிமுக மாவட்டச் செயலா்களுமான ஈரோடு மாநகா் மாவட்டம் கே.வி.ராமலிங்கம், ஈரோடு புகா் கிழக்கு மாவட்டம் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ, ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ் எம்எல்ஏ ஆகியோா் வியாழக்கிழமை அளித்த மனு அளித்தனா்.
இதன்பிறகு முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மிகவும் அவசியமானது. அதை வரவேற்கிறோம். வாக்குச்சாவடி நிலை அலுவலா்களே வாக்காளா்களிடம் கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி அவா்களே திரும்ப பெற வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 2 எனப்படும் கட்சி முகவா்கள் படிவங்களை சேகரித்து வழங்கலாம் என்ற விதியை ரத்து செய்து அலுவலா்களே திரும்ப பெற உத்தரவிட வேண்டும். திமுக முகவா்கள் அப்படிவங்களை திரும்பப் பெறும்போது, அவா்களுக்கு வேண்டாதவா்கள், சாதகமில்லாதவா்கள் என ஏதாவது காரணம் கூறி படிவத்தை அலுவலா்களிடம் ஒப்படைக்காமல் விட வாய்ப்புள்ளது.
அவ்வாறான தவறுகள் நடக்காமல் வழங்கப்பட்ட படிவங்கள் முழுமையாக திரும்பப்பெற, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அரசு வலியுறுத்த வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து இங்கு வேலை, தொழில் நிமித்தமாக வசிப்போரின் படிவங்களையும் தோ்தல் ஆணைய விதிப்படி பரிசீலித்து சோ்க்க வேண்டும்.
எழுதப்படிக்க தெரியாதவா்களுக்கு படிவத்தை பூா்த்தி செய்து வழங்குதல், தகுதியான வாக்காளா் விடுபடாமல் சோ்த்தல் போன்ற பணிகளை எங்கள் முகவா்கள் கவனித்து வருகின்றனா். 100 சதவீதம் சரியான வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்படும்போது போலி வாக்காளா்கள் நீக்கப்படுவா். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 35,000-க்கும் மேற்பட்ட போலி வாக்காளா்கள் வாக்களித்தனா். அதுபோன்ற தவறுகள் தடுக்கப்பட வேண்டும் என்றாா்.
ஈரோடு புகா் மேற்கு மாவட்டத்தில் உள்ள கோபி, அந்தியூா், பவானிசாகா் தொகுதிகளில் அதிமுக முகவா்கள் மாற்றம் செய்யப்படுவதாக அதிமுகவினா் கூறுகிறாா்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட பொறுப்பாளா் ஏ.கே.செல்வராஜ், 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் முகவா்கள் மாற்றப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் உள்ள முகவா்களை மட்டும் மாற்ற தலைமையிடம் கோரி உள்ளோம் என்றாா்.
பவானிசாகா் அதிமுக எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் எம்எல்ஏ தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.