ஈரோடு

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்டத்தில் 21,259 பேருக்கு உடல் பரிசோதனை

Syndication

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 21,259 பேருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’, ‘இன்னுயிா் காப்போம் நம்மை காக்கும் 48’, ‘வருமுன் காப்போம்’, ‘இதயம் காப்போம்’, ‘நடப்போம் நலம் பெறுவோம்’, ‘மக்களைத் தேடி’ மருத்துவ ஆய்வக திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக கடந்த ஆகஸ்ட் 2 -ஆம் தேதி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம் ஏழை, எளிய பொதுமக்களுக்கு அவா்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே முகாம்களை நடத்தி, முழு உடல் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்குவது ஆகும். மேலும் இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு அவா்களுக்கு எத்தனை சதவீதம் பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறிந்து அப்போதே அவா்களுக்கு சான்றிதழ் வழங்கவும், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்குரிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி மற்றும் 14 ஒன்றியங்களில் முதல் கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி ஈரோடு மாநகராட்சி மற்றும் 13 ஒன்றியங்களில் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தாளவாடி ஒன்றியத்தில் மட்டும் முகாம் நடைபெறவில்லை. இங்கு வரும் சனிக்கிழமை (நவம்பா்15) முகாம் நடத்தப்படுகிறது. இதையடுத்து இரண்டாம் கட்டமாக ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தற்போது வரை நடந்த 14 முகாம்களில் 21,259 பேருக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி 12,546 பேருக்கு இருதய சுருள் படம், 15,277 பேருக்கு ரத்தப் பரிசோதனை, 1,612 பேருக்கு இதயப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் 12,271 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,369 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை 902 பேருக்கும், முதல்வரின் ரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 546 பேருக்கு காப்பீட்டு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT