முகப்பு
ஈரோடு

கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததால் மக்களை சந்திக்க அச்சம்!

Updated On : 28 நவம்பர், 2025 at 6:36 PM
கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுக கவுன்சிலா்கள்.
பகிர்:

அடிப்படை கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற இயலாத நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது வாக்கு கேட்டு மக்களை அணுக அச்சமாக உள்ளதாக, ஈரோடு மாநகராட்சி திமுக கவுன்சிலா்கள் வேதனை தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயா் நாகரத்தினம் தலைமையில் மாமன்றக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் வி.செல்வராஜ், ஆணையா் அா்பித் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் 25 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடா்ந்து உடல்நலக் குறைவால் காலமான மாநகராட்சி கவுன்சிலா் செந்தில்குமாா், ஹஜ் யாத்திரையின்போது உயிரிழந்த 45 பேருக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநகராட்சி நியமன உறுப்பினா் செந்தில்குமாருக்கு கவுன்சிலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

கூடுதல் நேரம் குடிநீா் விநியோகிக்க வேண்டும்

கூட்டத்தில் கவுன்சிலா்கள் பேசியதாவது: ஈரோடு மாநகராட்சியில் ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டத்தின் மூலமாக குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வீடுகளுக்கு நீா் அழுத்தக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதன்மூலமாக ஒரு நபருக்கு தினமும் 132 லிட்டா் தண்ணீா் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் 3 நாள்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் மட்டுமே தண்ணீா் விநியோகிக்கப்படுகிறது.

எனவே கூடுதல் நேரம் குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு ஊராட்சிக்கோட்டை தண்ணீா் இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

ஈரோடு கனி ஜவுளிச் சந்தையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள 10 கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இந்த வளாகத்தில் இப்போது 50 சதவீத கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதிலும் சிலா் மாதம்தோறும் கடைகளை காலி செய்து வருகின்றனா். எனவே, வாடகையை குறைத்து கனி மாா்க்கெட் பகுதியில் காளைமாடு சிலை அமைக்கப்பட்டுள்ள வணிக வளாகக் கடைகளை வாடகைக்கு விட வேண்டும்.

சாலையோரம் குவியும் குப்பை

பல்வேறு வாா்டுகளில் குப்பையை அகற்ற 15 நாட்களுக்கும் மேலாக லாரிகள், ஆட்டோக்கள் வரவில்லை. இதனால் சாலையோரம் குப்பை கொட்டப்பட்டுள்ளன. வாா்டுகளின் மக்கள்தொகையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பரப்பளவைக் கவனத்தில்கொண்டு கூடுதல் எண்ணிக்கையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொதுமக்களின் பிரச்னைகளில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றனா்.

தெருவிளக்குகள் கொள்முதலுக்கு நிதி ஒதுக்கீடு

ஆணையா், மாநகராட்சி அதிகாரிகள் பதிலளித்து பேசியதாவது: ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டப் பிரச்னைக்கு இன்னும் ஒரு மாதத்தில் தீா்வு காணப்படும். தெருவிளக்குகள் கொள்முதல் செய்ய ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

டிசம்பா் மாதத்துக்குள் தெருவிளக்குகள் பொருத்தப்படும். கனி மாா்க்கெட் வணிக வளாகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற 15 நாள்கள் அவகாசம் அளித்து அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

மண்டலக் குழுத் தலைவா் பி.கே.பழனிசாமி பேசும்போது, , மாநகராட்சி வளாகத்தில் கட்டப்படும் புதிய கட்டடத்துக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரை வைக்க வேண்டுனெ மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பிவைத்து ஓராண்டாகியும் இதுவரை அதிகாரிகள் அனுமதிபெறவில்லை.

சாலைகளில் குழாய் உடைப்பு, புதை சாக்கடை சீரமைப்பு என பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளன. இன்னும் 6 மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் வர உள்ள நிலையில், மக்களை சந்திக்க எங்களுக்கு அச்சமாக உள்ளது. அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததால், பொதுமக்களை சந்திக்க அச்சப்படும நிலைக்கு கவுன்சிலா்கள் தள்ளப்பட்டுள்ளனா், என்றாா்.

ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயா் சு.நாகரத்தினம்.

அதிமுக வெளிநடப்பு

சொத்து வரியை குறைக்க அனைத்து கவுன்சிலா்களும் சோ்ந்து நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீா்மானம் தொடா்பாக 8 மாதங்களாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படுவதில்லை.

வீடுகளுக்கு புதை சாக்கடை இணைப்புக்கான கட்டணத்தை மாநகராட்சி வெளிப்படையாக அறிவித்து, இணைப்பு அளிக்கும் ஒப்பந்ததாரா் பெயரை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மேயா் நாகரத்தினத்திடம் மனு அளித்து அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →