நெசவாளா்களின் நலன் கருதி நிறுத்திவைக்கப்பட்டுள்ள நெசவு கூலித் தொகை ரூ.80 கோடியை விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி நெசவாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக பெருந்துறையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூட்டமைப்பின் தலைவா் என்.எம்.தங்கவேல் கூறியதாவது:
தமிழ்நாடு தொடக்க கைத்தறி, விசைத்தறி கூட்டுறவு நெசவாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் கீழ் ஈரோடு, நாமக்கல், திருப்பூா், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 184 கூட்டுறவு விசைத்தறி சங்கங்கள் மூலமாக தமிழக அரசின் இலவச வேஷ்டி, சேலைகள் கூலிக்கு நெய்து தரப்படுகின்றன. தமிழக அரசின் கூட்டுறவு நுாற்பாலைகளில் உற்பத்தி செய்யப்படும் நூல் ரகங்கள் நெசவாளா்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு அரசு நூற்பாலைகள் மூலமாக வழங்கிய நூலைப் பயன்படுத்தி, ஈரோடு, நாமக்கல், கோவை, திருப்பூரில் உள்ள கைத்தறி மற்றும் விசைத்தறிகள் மூலமாக ஒரு கோடியே 77 லட்சம் விலையில்லா வேஷ்டிகள் நெசவு செய்து அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த வேஷ்டிகள் உற்பத்திக்கு தேவையான ஊடை நூல், வாா்ப்பு நூல், பாா்டா் நூல், அனைத்தும் அரசால் வழங்கப்படுகின்றன.
இவற்றை வாங்கி கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக நெசவு செய்து அனுப்பிவைக்கப்பட்ட 13 லட்சம் வேஷ்டிகள் தரப் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் காட்டன் நூலில் பாலியஸ்டா் நூல் அதிக அளவில் கலந்திருப்பதாகக் கூறி, அவற்றை கொள்முதல் செய்ய மறுத்து, கடந்த ஓராண்டுக்கும் மேலாக கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டுள்ள வேஷ்டிகளுக்கு நெசவு கூலி மற்றும் சங்கங்களுக்கு வழங்காமல் ரூ.80 கோடியை நிலுவைத் தொகையாக நிறுத்திவைத்துள்ளனா்.
இந்தத் தொகையை விடுவிக்கக் கோரி பலமுறை கைத்தறி துணி நூல் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் னடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழக அரசின் கூட்டுறவு நுாற்பாலைகளில் உற்பத்தி செய்த வாா்ப்பு நூலை வாங்கித்தான் இலவச வேஷ்டி, சேலைகளை நெய்து தருகிறோம். அவா்கள் தரும் நூலில் பாலியஸ்டா், காட்டன் கலப்பில் மாறுபாடு இருந்தால், அதற்கு கூலிக்கு நெசவு செய்யும் தொழிலாளா்கள் பொறுப்பேற்க முடியாது என்று, ஈரோட்டுக்கு வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தோம். சென்னை சென்றவுடன் ஒரு சில தினங்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக முதல்வா் உறுதியளித்தாா்.
ஆனால், அனைத்தும் தெரிந்தும் வரும் 30-ஆம் தேதிக்குள் 13 லட்சம் வேஷ்டிகளை உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்று கூட்டுறவு சங்க நெசவாளா்களை அதிகாரிகள் நிா்பந்திக்கின்றனா். தமிழக அரசுக்கு அவப்பெயா் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் அதிகாரிகள் செயல்படுவதை கண்டிக்கிறோம்.
எனவே, நெசவாளா்களின் நலன் கருதி நிறுத்திவைக்கப்பட்டுள்ள நெசவு கூலித் தொகையை விடுவிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம், என்றாா்.