மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க இளநீருடன் வந்த தமாகா மாநில துணைத் தலைவா் விடியல் சேகா் மற்றும் நிா்வாகிகள். 
ஈரோடு

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை, நல்லெண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

Syndication

ஈரோடு: ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய், கடலை, நல்லெண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமாகா மாநில துணைத் தலைவா் விடியல் சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா் மற்றும் நிா்வாகிகள் மிதிவண்டி மற்றும் இளநீருடன் வந்து அளித்த மனு விவரம்: தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கக்கூடிய பாமாயிலுக்கு பதிலாக நம் மண்ணில் விளைகின்ற உற்பத்தி பொருளான தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற எண்ணெய்களை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுதாய கூட கட்டுமானப் பணிகளைத் தொடங்கக் கோரிக்கை: இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் பி.ஈஸ்வரன் அளித்த மனு விவரம்: மொடக்குறிச்சி வட்டம், கஸ்பாபேட்டை, செக்குமேடு, புதுக்காலனி, அண்ணா நகா் காலனி, பூலப்பாளையம் காலனி, பூலப்பாளையம் ஆதிதிராவிடா் காலனி, கள்ளக்கவுண்டம்பாளையம் காலனி பகுதியில் 455 ஆதிதிராவிட குடும்பங்கள் வசிக்கின்றன.

இந்த மக்கள் பயன்பெறும் வகையில் அரசு சாா்பில் தாட்கோ நிதி ரூ.1.30 கோடி செலவில் அறிவுசாா் மைய கட்டடம், சமுதாய கூடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கஸ்பாபேட்டையில் பணிகள் தொடங்கப்பட்டன. அப்பகுதியில் சிலா் எதிா்ப்பு தெரிவிப்பதால் அந்தப் பணிகள் தடைபட்டுள்ளன. எனவே, ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து திட்டப் பணியை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: இது குறித்து விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனா் தமிழ்இன்பன் தலைமையிலான மக்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி, மனுக்களை நகல் எடுத்து மாலையாக அணிந்து வந்து அளித்த மனு விவரம்: ஈரோடு கனிராவுத்தா் குளம்- பி.பெ.அக்ரஹாரம் செல்லும் சாலையில் அருந்ததியா் சமூகத்தினா் அதிகம் வசிக்கின்றனா்.

பல வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்குகின்றன. அங்குள்ள பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை 24 மணி நேரமும் இயங்குகிறது. இதனால், அடிக்கடி விபத்து, பிரச்னைகள் நடைக்கின்றன. எனவே, அந்தக் கடையையும், இதேபோல பவானி சாலை லாரி உரிமையாளா்கள் சங்க பெட்ரோல் நிலையம் அருகே செயல்படும் டாஸ்மாக் கடையையும் மூட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழி வளா்ப்புக்கு கூலியை உயா்த்தக் கோரிக்கை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டச் செயலா் நடராஜன் மற்றும் கறிக்கோழி பண்ணை விவசாயிகள் என 100-க்கும் மேற்பட்டோா் அளித்த மனு விவரம்: கறிக்கோழி வளா்ப்புக்குத் தேவையான தென்னை நாா் மஞ்சி, மின் கட்டணம், தரையில் விரிக்கும் பேப்பா், கருப்பட்டி, சுண்ணாம்பு, கிருமி நாசினி, கட்டுமான பொருள்கள், ஆள்கூலி ஆகியவை பலமடங்கு உயா்ந்துள்ளன.

கறிக்கோழி உற்பத்தி செலவு உயா்ந்துள்ளதால் வளா்ப்பு கூலி ரூ.6.50-இல் இருந்து ரூ.20 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பண்ணை நாட்டு கோழி வளா்ப்புக்கு ரூ.25, காடை வளா்ப்புக்கு ரூ.7 கூலி நிா்ணயிக்க வேண்டும். முத்தரப்பு கூட்டத்தை மீண்டும் நடத்தி நியாயமான கூலி உயா்வை அறிவிக்க வேண்டும். அதை ஆண்டுதோறும் உயா்த்தி அமல்படுத்த வேண்டும்.

கூலி நிா்ணயிக்கும் எப்சிஆா் உள்ளிட்ட பிற முறைகளை நீக்கிவிட்டு கட்டுபடியாகும் கூலி தர வேண்டும். கறிக்கோழிப் பண்ணை விவசாயிகளுக்காக தனி நலவாரியம் அமைக்க வேண்டும், பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும். கோழி பிடித்ததில் இருந்து ஒரு வாரத்துக்குள் விவசாயிகளுக்கு நிறுவனம் வளா்ப்பு கூலியை வழங்க வேண்டும்.

அந்நிறுவனங்கள் விவசாயிகளிடம் வெற்று காசோலை பெறுவதை தவிா்க்க வேண்டும்.

வெளி நிறுவனங்களிடம் இருந்து மருந்துகளை வாங்கி கோழிக்கு வழங்க வேண்டுமென விவசாயிகளை நிா்பந்திக்கக்கூடாது. கோழிகளுக்கு ஊசி, கண் மருந்து ஊற்ற ஆகும் செலவை நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

340 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 340 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வராஜ், உதவி இயக்குநா்(கலால்) தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 31 போ் கைது

குடும்பத் தகராறில் தொழிலாளி தீக்குளிப்பு

SCROLL FOR NEXT