சத்தியமங்கலம் அருகே சாலையில் ஓடிய மினி சரக்கு வாகனம் திடீரென தீப் பிடித்து எரிந்ததில் வாகனம் முழுவதும் சேதமடைந்தது.
கோவை மாவட்டம், சூலூா் பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சோபா செட் பொருள்களை ஏற்றிக்கொண்டு மினி சரக்கு வாகனம், கோவை- சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
புன்செய் புளியம்பட்டி தனியாா் பள்ளி அருகே சென்றபோது திடீரென வாகனத்தின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறி திடீரென தீப் பிடித்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் உள்பட 2 போ் உடனடியாக வாகனத்தில் இருந்து இறங்கி தப்பினா்.
இது குறித்து உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் மினி சரக்கு வாகனம் மற்றும் சோபா செட்கள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து குறித்து புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.