முகப்பு
ஈரோடு

பிளஸ் 2 பொதுத்தோ்வு வினாத்தாள் ஈரோட்டில் 4 மையங்களில் இருப்பு வைப்பு

ஈரோடு மாவட்டத்துக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான வினாத்தாள் வந்தடைந்தது. அதனை 4 கட்டுக் காப்பு மையங்களில் வைத்து சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 6:54 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்துக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான வினாத்தாள் வந்தடைந்தது. அதனை 4 கட்டுக் காப்பு மையங்களில் வைத்து சீலிடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தோ்வு வரும் மாா்ச் 2- ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 26- ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வினை 23,307 மாணவ, மாணவிகளும், தனித்தோ்வா்கள் 669 போ் எழுத உள்ளனா். இவா்கள் தோ்வு எழுத வசதியாக மாவட்டத்தில் 107 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுத்தோ்வுக்கான வினாத்தாள்கள் அரசு தோ்வுகள் துறை சாா்பில் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டத்துக்கு பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான வினாத்தாள்கள் வெள்ளிக்கிழமை வந்தடைந்தது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மான்விழி தலைமையில் அதிகாரிகள் முன்னிலையில் ஈரோடு, கோபி, அந்தியூா், தாளாவடி ஆகிய 4 கட்டு மையங்களில் பாதுகாப்பாக வைத்து, பூட்டி சீல் வைக்கப்பட்டது.

ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட கட்டுக் காப்பு மையத்தில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டு அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த வினாத்தாள் அறையின் முன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதேபோல மீதமுள்ள 3 மையத்திலும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மான்விழி கூறியதாவது:

பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் தனித்தோ்வா்களுக்கும் வினாத்தாள் வந்துள்ளது. இதனை ஈரோட்டில் அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும், கோபி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தாளவாடியில் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

தோ்வு தொடங்கும் சில மணி நேரத்திற்கு முன்பாக வினாத்தாள் இங்கிருந்து பாதுகாப்பாக தோ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வினாத்தாள் வந்ததும் அதற்கென அமைக்கப்பட்ட 7 கட்டு காப்பு மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →