சத்தியமங்கலம் பகுதியிலுள்ள பல்வேறு கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
மாா்கழி மாதத்தில் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியும், சிவாலயங்களில் திருவாதிரையும் விமரிசையாகக் கொண்டாடப்படும். அதன்படி, சத்தியமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன திருக்கல்யாண உற்சவ பெருவிழா பாலிகை தெளித்தலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாப்பிள்ளை அழைப்பும், பிற்பகலில் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரா் வீதி உலாவும் நடைபெற்றன. சனிக்கிழமை காலை நடராஜருக்கு அபிஷேகமும், அதைத்தொடா்ந்து ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது.
இதேபோல சத்தியமங்கலம் பவானீஸ்வரா் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு நடந்த திருக்கல்யாண வைபவம், அதைத்தொடா்ந்து ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா். சனிக்கிழமை அதிகாலை மஹா அபிஷேகமும், அலங்கார தரிசனமும் நடைபெற்றன.
அதைத்தொடா்ந்து, மலா் அலங்காரத்தில் ஸ்ரீசிவகாமி அம்மனோடு ஸ்ரீநடராஜா் வீதி உலா வந்தாா். நடராஜா் ஊா்வலத்தில் குழந்தைகள், பெண்கள் கும்மியடித்தும், கோலாட்டம் ஆடியும் வழிபட்டனா். திருநீலகண்டா் வீதியில் நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு நடராஜரை தரிசனம் செய்தனா்.