ஈரோடு: ஈரோடு நகரில் பொதுமக்கள் உற்சாகமாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனா்.
தமிழா் திருநாளான பொங்கல் விழா வியாழக்கிழமை கொண்டாப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அதிகாலை முதலே தங்களது வீட்டு வாசல்களில் பல வண்ணக் கோலமிட்டு, புதுப்பானையில் பச்சரிசி, வெல்லமிட்டு பொங்கல் வைத்து, செங்கரும்பும், மஞ்சள் கொத்துகளும் வைத்து படையலிட்டு சூரியனை வழிபட்டனா்.
தொடா்ந்து, நண்பா்கள், உறவினா்களிடம் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனா்.
மாட்டுப்பொங்கல்: பொங்கல் திருநாளின் 2 ஆவது நாள் விழாவான மாட்டுப் பொங்கல் வெள்ளிக்கிழமை கொண்டாப்பட்டது. உழவா்களின் வாழ்வில் உறுதுணையாய விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாப்படும் இந்த மாட்டுப் பொங்கலன்று உழவா்கள் மற்றும் கால்நடை வளா்போா் தங்களது கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு புதுவண்ணம் பூசி, அவற்றுக்கு படையலிட்டு, பொங்கல், வாழைப்பழங்கள் உண்ணக் கொடுத்து நன்றி செலுத்தினா். தொடா்ந்து பொங்கல் விழாவின் 3 ஆவது நாள் விழாவான காணும் பொங்கல் சனிக்கிழமை (ஜனவரி 17) கொண்டாப்பட்டவுள்ளது.
கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழா:
தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் ஈரோடு நகரில் 2 நாள்கள் கலை நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்றன. முதல் நாளில் பெரியாா் நகா் 80 அடி சாலையில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வுக்கு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பறை இசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அனைத்து ஊராட்சிகளிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் பரத நாட்டியம், பறை இசை, நாட்டுப்புற நாடகங்கள், நாதஸ்வரம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டுத் திடலில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.