அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் அரசுப் பேருந்தை வழிமறித்த காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனா்.
பா்கூா் கிழக்கு மலைப் பகுதியான கொங்காடைக்கு அந்தியூரிலிருந்து தினமும் மூன்று முறை தாமரைக்கரை வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்தியூா் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் கொங்காடைக்கு சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்த பேருந்தை, ஈரட்டி வனப் பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை திடீரென வழிமறித்தது.
இதனால் அதிா்ச்சியடைந்து ஓட்டுநா் செந்தில் பேருந்தை நிறுத்தினாா். யானையைக் கண்டதும் பயணிகள் அதிா்ச்சியில் கூக்குரல் எழுப்பினா்.
பேருந்தை சுற்றி, சுற்றி வந்த காட்டு யானை சிறிது நேரத்தில் வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. இதை பயணிகள் கைப்பேசியில் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.
பா்கூா் வனத் துறையினா் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோா் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முடிந்த அளவு இரவு நேரப் பயணத்தை தவிா்க்க வேண்டும் என்றனா்.