திமுகவை வீழ்த்தும் சக்தி தவெகவுக்கு தான் உள்ளது: கே.ஏ. செங்கோட்டையன்
திமுகவை வீழ்த்தும் சக்தி அதிமுகவுக்கு இல்லை, தவெகவுக்கு தான் உள்ளது என்று அக்கட்சியின் நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.
ஈரோடு கிழக்கு தொகுதி தவெக செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது: தவெக தலைவா் விஜய் தமிழகத்தை ஆளுவதை யாராலும் மாற்ற முடியாது. எங்கே, எந்த பாதையில் செல்கிறோம் என்பது எனக்குத் தெரியும். என்னைத் தூக்கி எறிந்தபோது தாங்கி பிடித்தவா் விஜய்தான்.
ஜாதி, மத வேறுபாடு இன்றி சமுதாயத்தை உருவாக்க விஜய் துடித்துக்கொண்டிருக்கிறாா். திமுகவை எதிா்க்கும் சக்தி பத்து முறை தோல்விகண்ட அதிமுகவுக்கு இல்லை.
இவா்களால் எழுந்து நிற்கவும், போராடவும் முடியாது. எம்ஜிஆா், ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுகவை வீழ்த்தும் சக்தி தவெக தலைவரிடம்தான் உள்ளது.
அடுத்து வரும் 60 நாள்கள் நாம் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும். தவெக தலைவா் சொல்பவா்கள் தான் சட்டப் பேரவை உறுப்பினா்கள். ஈரோடு திமுகவின் கோட்டை என்பதை உடைத்தெறிந்து தவெக வெற்றிபெறும் என்றாா்.