கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை கொடிவேரி தடுப்பணையில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் அருவிபோல தண்ணீா் கொட்டுவதால் பண்டிகை, விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்துவிட்டு விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாள்களில் சுற்றுலாத் தளங்களில் உள்ள அருவிகளுக்கு படையெடுத்து வருகின்றனா்.
இதில், கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் அருவியில் நீண்ட நேரம் குளித்தும், குழந்தைகளுடன் விளையாடியும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்ந்தனா்.
குறிப்பாக கடந்த சில வாரங்களக்கு முன்னா் கொடிவேரி தடுப்பணையில் குறைந்த அளவில் பாறை இடுக்குகளில் வெளியேறிய தண்ணீரில் குளித்து ஏமாற்றம் அடைந்து சென்ற சுற்றுலாப் பயணிகள், கடந்த 4-ஆம் தேதி முதல் பவானிசாகா் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்காலுக்கு விநாடிக்கு 300 கனஅடியும், குடிநீா் தேவைக்கு விநாடிக்கு 100 கனஅடியும் கூடுதலாக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக குளித்து சென்றனா்.