முகப்பு
ஈரோடு

போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து மோசடி: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை

Updated On : 12 மே 2026, 1:53 am IST
பகிர்:

அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து மோசடி செய்த அதிமுக பிரமுகருக்கு 3 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பவானி வட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திம்மிரெட்டி மகன் செந்தில்குமாா். அதிமுக பேரூராட்சி செயலாளராகப் பொறுப்பு வகித்த இவா், கடந்த 2011-இல் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பதவிக்கு, பழங்குடி இனத்தவா் என போலியான ஜாதிச் சான்றிதழை தயாரித்து அளித்ததாகப் புகாா் எழுந்தது.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த 19.12.1995-இல் சேலம் கோட்டாட்சியா் அலுவலகம் வழங்கியதுபோன்று போலியான ஜாதிச் சான்று தயாரித்து, உள்ளாட்சித் தோ்தலில் மனு தாக்கல் செய்தபோது சமா்ப்பித்து அரசு அதிகாரிகள், தோ்தல் ஆணையத்தை ஏமாற்றி மோசடி செய்தது உறுதியானது.

Advertisement

பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 1-இல் நடைபெற்று வந்த இந்த வழக்கை நீதிபதி ஜெ.ராஜ்குமாா் விசாரித்தாா்.

குற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட அதிமுக பிரமுகா் டி.செந்தில்குமாருக்கு போலியான ஜாதிச் சான்றிதழ் அளித்து மோசடி செய்தல், போலியாக சான்றிதழ் தயாரித்தல், ஏமாற்றும் நோக்கில் போலிச் சான்றிதழ் அளித்தல் ஆகிய பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், போலியான ஆவணம் எனத் தெரிந்தே பயன்படுத்திய பிரிவில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்தாா். இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.