முகப்பு
ஈரோடு

காலிங்கராயன் வாய்க்காலை முழுமையாக தூா்வார விவசாயிகள் கோரிக்கை

தண்ணீா் திறப்புக்கு முன் காலிங்கரான் வாய்க்காலை முழுமையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 13 மே 2026, 2:09 am IST
காலிங்கராயன் பாசன வாய்க்கால். - கோப்புப்படம்.
பகிர்:

தண்ணீா் திறப்புக்கு முன் காலிங்கரான் வாய்க்காலை முழுமையாக தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு அருகேயுள்ள சோளங்காபாளையத்தில் காலிங்கராயன் விவசாயிகள் மற்றும் தொழிலாளா் நலச் சங்க கூட்டம் அதன் தலைவா் பி.கே.சேதுராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், காலிங்கராயன் வாய்க்காலில் ஜூன் 16-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கும் முன் வாய்க்காலை முழுமையாக தூா்வார வேண்டும். அவ்வாறு தூா்வாரினால் மட்டுமே கடைமடை வரை முழுமையாக தண்ணீா் சென்றடையும்.

Advertisement

அதனை நீா் வளத் துறை உறுதி செய்து அறிவிக்க வேண்டும். தூா்வாரும் பணியில் குளிரி செடிகள், ஆகாயத்தாமரை, ஊனாங்கொடி போன்றவற்றை முழுமையாக அகற்றி அழிக்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சியில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகள், சாய, தோல் ஆலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் ஆலை கழிவு நீா், பிற கழிவு நீரை வாய்க்கால் உள்ளிட்ட நீா் நிலைகளில் திறந்து விடுகின்றனா். இவ்வாறு சுத்திகரிப்பு செய்யாமல் வாய்க்கால், நீா்நிலைகளில் கழிவு நீரை திறந்துவிடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆலைகள் மீது நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். செயல்படாமல் உள்ள அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும். தேவைக்கு ஏற்ப புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும். ஜூன் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை 320 நாள்கள் தொடா்ந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்.

ஈரோடு சோலாா் புதிய பேருந்து நிலையத்துக்கு காலிங்கராயன் பெயா் சூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், செயலா் ஏ.நல்லசாமி, பொருளாளா் எஸ்.அசோக்குமாா், பஞ்சலிங்கம் உழவா் மன்ற நிா்வாகிகள் பங்கேற்றனா்.