முகப்பு
நீலகிரி

நீதிமன்றம், தீர்ப்பாணையம் மூலமாக நிரந்தர தீர்வு காண முடியாது

காவிரி நதி நீர் தொடர்பான பிரச்னைக்கு நீதிமன்றம் மூலமோ, தீர்ப்பாணையம் மூலமோ நிரந்தர தீர்வு காண முடியாது என, கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறினார்.

Updated On : 12 மே 2013, 5:35 am IST
பகிர்:

காவிரி நதி நீர் தொடர்பான பிரச்னைக்கு நீதிமன்றம் மூலமோ, தீர்ப்பாணையம் மூலமோ நிரந்தர தீர்வு காண முடியாது என, கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கூறினார்.

    உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், குடும்பத்தினருடன் எடியூரப்பா சனிக்கிழமை அரசினர் தாவரவியல் பூங்காவை சுற்றிப் பார்க்க வந்தார்.

  பின்னர் பூங்கா வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:

Advertisement

Advertisement

    காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டாலும், நீதிமன்றத்துக்குச் சென்றாலும் நிரந்தர தீர்வு காண முடியாது. இரு மாநில அரசுகளும் கௌரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காண வேண்டும். தற்போதுள்ள சூழலில் கர்நாடகத்தில் குடிப்பதற்குகூட காவிரி நீர் கிடைப்பதில்லை.

    காவிரியில் தண்ணீர் இருந்தபோது தமிழகத்துக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், தற்போது கர்நாடகத்துக்கே தண்ணீர் இல்லாத நிலையில், தமிழகத்துக்கு எப்படி தர முடியும்? எனவே, இரு மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை மூலமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

   கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கு நான்தான் காரணமென கர்நாடக மக்கள்தான் கூறுகின்றனர். இருப்பினும் காங்கிரஸ் ஆட்சியில் கர்நாடகம் மேலும் வளர்ச்சியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது அவர்களுக்கு தேனிலவு காலம் என்பதால் சிறப்பான ஆட்சி நடக்கும்.

   இந்தத் தேர்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்றாலும், கட்சி துவங்கப்பட்டு 6 மாதங்களுக்குள் 10 சதவீத வாக்குகளோடு 6 இடங்களைப் பெற்றுள்ளது எனது கட்சிக்கு உள்ள சிறப்பான எதிர்காலத்தையே காட்டுகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. அதற்கு கால அவகாசம் உள்ளது. இருப்பினும் தாய் கட்சியில் மீண்டும் இணைவதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லை என்றார்.

   உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தில் எடியூரப்பாவும் இருந்தது, பூங்காவில் இருந்த கர்நாடக சுற்றுலாப் பயணிகளிடையே வியப்பை ஏற்படுத்தியது. அதனால், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு ஏராளமானோர் ஆர்வம் காட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.