முகப்பு
நீலகிரி

தமிழக ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா

தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை கூடலூரில் நடைபெற்றது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:14 AM
பகிர்:

தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை கூடலூரில் நடைபெற்றது.
கூடலூர் வட்டக் கிளை சார்பில் ஜி.ஜி.டி.அரங்கில் நடைபெற்ற இந்த  விழாவுக்கு வட்டாரத் தலைவர் செ.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் இரா.உமாசங்கர், மகளிர் அணிச் செயலாளர் இரா.நிர்மலா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரப் பொருளாளர் வரவு-செலவு அறிக்கையை சமர்பித்தார். மாவட்டச் செயலாளர் சு.முருகேசன்
சிறப்புரையாற்றினார். உதகை தமிழ் துறைப் பேராசிரியர்  போ.மணிவண்ணன், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தேவாலா அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி கிறிஸ்டில்டா ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக வட்டாரச் செயலாளர் வி.மதியழகன் வரவேற்றார். மகளிர் அணிச் செயலாளர் சப்னா பிரீத்தா நன்றி கூறினார்.
மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.  இதில்,  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வினை மே மாதத்தில் நடத்த வேண்டும். அரசால் ஈர்த்துக் கொள்ளப்பட்ட டான் டீ துவக்கப் பள்ளிகளுக்கு உடனடியாக தலைமை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க வேண்டும். அனைத்து வகை நடுநிலைப் பள்ளிகளுக்கும் தமிழ் மற்றும் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பந்தலூர் தனி ஒன்றியமாக செயல்படுவதால் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளை பாதுகாக்க காவலர்களை நியமிக்க வேண்டும். பள்ளிகளுக்கு இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வியில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடலூரில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.