குன்னூர் பேருந்து நிலையத்தில் பிரபல உணவகத்துக்கு "சீல்'
குன்னூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பிரபல உணவகத்துக்கு நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர்.
குன்னூர் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பிரபல உணவகத்துக்கு நகராட்சி ஆணையர் சரஸ்வதி தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை "சீல்' வைத்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான 891 கடைகளை நடத்தி வந்தவர்கள் அவற்றை உள் வாடகையாக விட்டு பல ஆயிரங்கள் வரை மாதந்தோறும் வசூலித்து வருவதால், நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
புதிதாகப் பொறுப்பேற்ற நகராட்சி ஆணையர் சரஸ்வதி இந்தக் கடைகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகத்துக்கு வருவாய் ஈட்டும் வகையில் கடைகளின் வாடகையை உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டு, 891 கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கும் பணி துவங்கியது.
இந் நிலையில் பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பிரபல உணவகம் தரமில்லாத கட்டடத்தில் இயங்கி வருவதால் அதனை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்த நிலையிலும், அந்த உணவகம் தொடர்ந்து அங்கு இயங்கி வந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த உணவகத்துக்கு வந்த அதிகாரிகள் உணவகத்தின் பொருள்களை வெளியில் எடுத்துவைத்தபின் கடைக்கு "சீல்' வைத்தனர். இந்த உணவகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வளையல் கடைக்கும் பூக்கடைக்கும் "சீல்' வைக்கப்பட்டது.
குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான 25 கடைகளை இந்த உணவக நிர்வாகம் உள்வாடகைக்கு விட்டிருந்தது கண்டறியப்பட்டு கடந்த மாதம் "சீல்' வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பணியைத் தொடர்ந்து, 25-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.