கூடலூரில் நிலப் பிரச்னையை திமுக கண்டுகொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கூடலூரில் பிரிவு 16ஏ நிலப் பிரச்சனை தொடர்பாக திமுக தலைமைக் கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
கூடலூரில் பிரிவு 16ஏ நிலப் பிரச்சனை தொடர்பாக திமுக தலைமைக் கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உதகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கரன், முன்னாள் மாவட்டச் செயலர்கள் என்.வாசு, ஆர்.பத்ரி, தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூடலூரில் உள்ள ஜென்மம் நிலங்களை வனத் துறைக்கு வகை மாற்றம் செய்யும் வகையிலான சட்ட திருத்தம் 16ஏ அண்மையில் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்குள் எந்த நிலம் வகைப்படுத்தப்படும் என்ற விவரம்கூட தெரிவிக்கப்படவில்லை. இதற்கு சட்டப் பேரவையில் திமுக பெரியளவில் எதிர்ப்புக்காட்டவில்லை. இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இந்த சட்டத் திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பட்டா வழங்கத் தடையாகவுள்ள அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் வன உரிமைச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பழங்குடியின மக்களுக்கு நிலப் பட்டாவுடன், வீடுகள், தொகுப்பு வீடுகளையும் கட்டித்தர வேண்டும்.
இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 22 மாநிலங்களில் 100 சதவீத அளவுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள தகவல் தவறானதாகும்.
கூடலூர் பகுதியில் மட்டும் சுமார் 10,000 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் தமிழகத்தில் 100 சதவீத மின் இணைப்புக் கொடுத்துள்ளதாக தமிழக மின் துறை அமைச்சர் தவறான தகவலை தில்லிக்கு தந்துள்ளார். எனவே, மின் இணைப்பு இல்லாத அனைவத்து வீடுகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு அளிக்கப்பட வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் யானைகள் தாக்கியதில் மட்டும் சுமார் 90 பேர் உயிரிழந்துள்ளனர். வன விலங்குகளின் தாக்குதலிலிருந்து மக்களையும், விளைநிலங்களையும் பாதுகாத்திட அறிவியல்ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வன விலங்குகள் தாக்குதலில் உயிரிழப்போருக்கான நிவாரணத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தித் தர வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் வட்டாரங்களில் வரும் 27ஆம் தேதி 12 மையங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். ஜனவரி 28 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ஆம் தேதி வரை 200 குழுக்கள், 25,000 வீடுகளில் வசிக்கும் சுமார் 50,000 மக்களை நேரில் சந்தித்து கூடலூர் பகுதிக்கான பிரச்னைகள் குறித்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்படும் என்றனர்.