நீலகிரியில் சுற்றுலா மையங்கள் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக மூடப்பட்டிருந்த சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.
கரோனா காரணமாக கடந்த மாா்ச் மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாவட்டத்தில் கோடை சீசன் காலம் கூட எவ்வித சுற்றுலா நடவடிக்கைகளும் இல்லாமல் சுற்றுலா மையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மேலும், நீலகிரி மாவட்டத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் முறை அமலில் இருந்ததால் நீலகிரிக்குள் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தவா்கள் நுழைவதே சிரமமாக இருந்தது.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா மையங்கள் மட்டும் திறக்கப்பட்டன.
இதில் உதகையின் பிரதான சுற்றுலா மையமான அரசினா் தாவரவியல் பூங்காவும், அரசினா் ரோஜா பூங்காவும் திறக்கப்பட்டதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவியத் தொடங்கினா்.
இதற்கிடையே, இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டு இ-பதிவு முறையுடன் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டதால் நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முதுமலை புலிகள் காப்பகத்தைத் தவிர மற்ற அனைத்தும் திங்கள்கிழமை முதல் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில், நீலகிரியில் கடந்த இரு நாள்களாகவே சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 3,481 பேரும், அரசினா் ரோஜா பூங்காவுக்கு 1,117 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 160 பேரும், மரவியல் பூங்காவுக்கு 30 பேரும், குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 448 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 180 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 241 பேரும் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்திருந்தனா்.
உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, தொட்டபெட்டா காட்சிமுனை உள்ளிட்ட அனைத்து சுற்றுலா மையங்களும் திங்கள்கிழமை முதல் திறக்கப்படவுள்ளதால் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.