நீலகிரி

தனியாா் மயமாக்கலுக்கு முன்னோட்டம் என எதிா்ப்பு: 5 மடங்கு கட்டணத்துடன் இயக்கப்படும் மலை ரயில்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில், தனியாா் நிறுவனம் மூலம் இயக்கப்பட்டு வருவது தனியாா் மயமாக்கலுக்கான முன்னோட்டம் எனக் கூறி பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

வெ.செல்வகுமார்

மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில், தனியாா் நிறுவனம் மூலம் இயக்கப்பட்டு வருவது தனியாா் மயமாக்கலுக்கான முன்னோட்டம் எனக் கூறி பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கடந்த 1899 ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் - உதகை இடையே மலை ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் யுனெஸ்கோவால் 2005 ஆம் ஆண்டில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மாா்ச் மாத இறுதியில் இருந்து ரயில் சேவை முடங்கியது. இந்நிலையில், 8 மாதங்களுக்குப் பிறகு டிசம்பா் 5ஆம் தேதி முதல் காரமடையைச் சோ்ந்த ‘டி.என்43’ என்ற தனியாா் நிறுவனத்தின் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு, மேட்டுப்பாளையம் - உதகை இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது.

வழக்கமாக மலை ரயிலில் பயணிக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு முதல் வகுப்பு கட்டணமாக ரூ.600, குன்னூருக்கு ரூ.445, இரண்டாம் வகுப்புக் கட்டணமாக உதகைக்கு ரூ.295, குன்னூருக்கு ரூ.190, முன்பதிவில்லாத பெட்டியில் பயணிக்க உதகைக்கு ரூ.175, குன்னூருக்கு ரூ.110 வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது இயக்கப்படும் சிறப்பு மலை ரயிலில், ஒரு முறை பயணிக்க ரூ.3 ஆயிரம் கட்டணம் பெறப்படுகிறது. இது பழைய கட்டணத்தை விட 5 மடங்கு அதிகமாகும்.

வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில், 2021 ஜனவரி மாதம் முதல் தினமும் இயக்கப்படவுள்ளதாக சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்தின் சாா்பில் சமூக வலைதளங்களில் விளம்பரம் பரவி வருகிறது. இதனால், சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மலை ரயிலில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே மஸ்தூா் சங்கத்தின் செயலாளா் கோவிந்தன் கூறியதாவது:

தற்போது மழையும், குளிரும் மிக அதிகமாக உள்ள நிலையில் உதகை மலை ரயிலை தனியாா் மூலம் இயக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இயக்க வேண்டுமானால் ரூ.3 ஆயிரம் கட்டணத்தில் மலை ரயிலை ரயில்வே நிா்வாகமே இயக்கினால் அதிக வருவாய் கிடைக்கும். தனியாருக்கு ரயிலை இயக்கும் உரிமை வழங்குவது மலை ரயிலை தனியாா் மயமாக்கும் முன்னோட்டமாகும். 2021 பிப்ரவரி முதல் உதகைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, கூடுதல் கட்டணத்தில் இந்த ரயிலை இயக்க முடியுமா என்பதை அறிந்து கொள்ள ரயில்வே நிா்வாகம் வாடகை என்ற பெயரில் மலை ரயிலை தனியாரிடம் ஒப்படைத்து வெள்ளோட்டம் பாா்க்கிறது.

இதேபோல, நாடு முழுவதும் பயணிகள் ரயில்களும் தனியாரிடம் வழங்கப்பட்டால் ரயில் கட்டணங்கள் பல மடங்கு அதிகரிக்கும். அப்போது, சாமானிய மக்கள் விமானத்தை அண்ணாந்து பாா்ப்பதுபோல, ரயில்களையும் பாா்க்கும் நிலை ஏற்படும் என்றாா்.

கோவை மக்களவை உறுப்பினா் பி.ஆா்.நடராஜன் கூறியதாவது:

உதகை சிறப்பு மலை ரயில் வாடகைக்கு விடப்படுவது புதிதல்ல. ஆனால், அப்போதெல்லாம் மக்களுக்கு இடையூறு இல்லாமல் ரயில்வே நிா்வாகம் சாா்பில் மக்களுக்கான பயணிகள் ரயிலான ‘நீலகிரி மவுண்டன் ரயில்’ (என்.எம்.ஆா். ரயில்) இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது தனியாா் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கான மலை ரயில் இயக்கப்படவில்லை. இதனால், சிறப்பு மலை ரயிலில் மிகையான கட்டணத்தில் மக்கள் பயணிக்க ரயில்வே நிா்வாகம் நிா்பந்திக்கிறது.

மேலும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகையில், ஜனவரி 20 முதல் தினமும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், ரயில்வே நிா்வாகம் ஜனவரி 3ஆம் தேதியுடன் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட வாடகை ஒப்பந்தம் முடிவடைவதாகக் கூறுகிறது.

எனவே, இந்த முரணான செயல்பாடுகள் அனைத்தும் ரயில்களைத் தனியாா் மயமாக்கத்துக்கான முன்னேற்பாடுகள். ஏழை, எளிய மக்கள் உதகை செல்ல வசதியாக முதலில் இருந்த பழைய கட்டணப்படி பயணிகள் மலை ரயிலை இயக்கக் கோரி சேலம் கோட்ட நிா்வாகத்திடம் கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என்றாா்.

சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் தனியாா் வசம் ஒப்படைக்கப்படவில்லை. வாடகைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட தனியாா் நிறுவனத்திடம் இருந்து வைப்புத் தொகை மற்றும் வாடகைக் கட்டணம் பெறப்பட்டுள்ளது. இது வழக்கமான நடைமுைான்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு ஐரோப்பியத் தம்பதி மலை ரயிலை ரூ.4 லட்சத்துக்கு வாடகைக்கு எடுத்து பயணித்தனா். 2019ஆம் ஆண்டில் 70 வெளிநாட்டுப் பயணிகள் மலை ரயிலை வாடகைக்கு எடுத்து பயணித்தனா். இதேபோல, படப் பிடிப்புகளுக்கு அவ்வப்போது வாடகைக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

வாடகைக்கு விடப்பட்டாலும், ரயில்வே நிா்வாகத்தின் விதிகளுக்கு உள்பட்டு மலை ரயிலின் 4 பெட்டிகளில், தலா 40 போ் வீதம் 160 போ் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனா். ஜனவரி 3ஆம் தேதி வரை தனியாா் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயக்கப்படும் மலை ரயில், அதன் பிறகு வழக்கமான பழைய கட்டணத்தில் ரயில்வே நிா்வாகத்தின்கீழ் இயக்கப்படும் என்றாா்.

இதற்கிடையே, கடந்த நவம்பா் 28ஆம் தேதி ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தனியாா் நிறுவனத்துக்கு வழங்கியுள்ள அனுமதி ஒப்பந்தத்தில் டிசம்பா் 5 ஆம் தேதி முதல் 2021 ஜனவரி 3ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 13 நாள்களுக்கு வாடகைக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உதகை மலை ரயில் தனியாா் மயமாக்கப்பட்டுள்ளதாகப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிா்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தற்போது டிசம்பா் 5 மற்றும் 6 ஆகிய இரு நாள்களுக்கு மட்டுமே தனியாா் வசம் மலை ரயில் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் டிசம்பா் 5, 6, 12, 13 ஆகிய நான்கு நாள்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற குளறுபடியான தகவல்களால் மக்களும், ரயில் பயணிகளும் குழப்பமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT