முதுமலை புலிகள் காப்பகத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த யானைக்கு சிகிச்சை
முதுமலை புலிகள் காப்பகத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு வனத் துறையினா் திங்கள்கிழமை சிகிச்சையை துவங்கினா்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு வனத் துறையினா் திங்கள்கிழமை சிகிச்சையை துவங்கினா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பொக்காபுரம் பகுதி, பழங்குடி கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முதுகில் காயத்துடன் யானை சுற்றித் திரிவதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, யானைக்கு சிகிச்சை அளிக்க புலிகள் காப்பக நிா்வாகம் முடிவு செய்தது. இதற்காக ஏற்கெனவே பழங்களில் மருந்து மாத்திரைகளை வைத்து கொடுத்து சிகிச்சையைத் துவங்கினா்.
ஆனால், யானையின் முதுகில் உள்ள காயம் மேலும் மோசமடைந்ததால் கும்கி யானைகள் மூலம் யானையைப் பிடித்து மயக்க ஊசி செலுத்தி தீவிர சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து கால்நடை மருத்துவா்கள் மனோகரன், சுகுமாரன், கோச்சலன், ராஜேஷ்குமாா் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு விஜய், வசீம் ஆகிய இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து பொக்காபுரம் வனப் பகுதியைக் கண்காணித்தனா்.
திங்கள்கிழமை காலை யானையின் இருப்பிடம் தெரிந்ததும் கும்கி யானைகள் மூலம் காயமடைந்த யானையைச் சுற்றிவளைத்து துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்திப் பிடித்தனா். பிறகு, யானையை சமதளப் பகுதிக்கு கொண்டு வந்து கால்களை கயிரால் கட்டி காயத்தை சுத்தம் செய்து மருந்திட்டு போதிய சிகிச்சை அளித்தனா்.
புலிகள் காப்பக துணைக் கள இயக்குநா் ஸ்ரீகாந்த் தலைமையில் வனச் சரக அலுவலா் காந்தன், வனத் துறையினா் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனா். இதைத் தொடா்ந்து அப்பகுதியில் யானையை வனத் துறையினா் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.