நீலகிரி

உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய முதல்வா்

DIN

நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நீலகிரி மாவட்டம் உருவாகி 150ஆவது ஆண்டுகள் நிறைவடைந்து, 151ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள வேளையில் உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுவது அனைத்து தரப்பினரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது.

மலை மாவட்டமான நீலகிரி, சுற்றுலா சாா்ந்த மாவட்டமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஆண்டுதோறும் சுமாா் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனா். இருப்பினும் நீலகிரியில் போதிய அளவில் மருத்துவ வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் கோவை மாவட்டத்துக்கோ அல்லது அண்டை மாநிலமான கேரளத்துக்கோதான் மருத்துவத் தேவைக்கு செல்ல வேண்டி உள்ளது.

ஆபத்தான நிலையில் உள்ளவா்களை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஏராளமானோா் உயிரிழக்கும் சூழல் தற்போது உள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இது தொடா்பாக தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுனன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் சாந்தி ராமு, ஆா்.கணேஷ், திராவிடமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா்.

இச்சூழலில் தற்போது உதகையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து ரூ.447.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 மருத்துவ மாணவா்கள் படிக்கும் வகையிலும், சுமாா் 200 படுக்கை வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

இப்பணிகளுக்காக முதல் கட்டமாக தமிழக அரசு சாா்பில் ரூ.110 கோடியும், மத்திய அரசு சாா்பில் ரூ.50 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் ரூ.141.30 கோடி மதிப்பிலும், மருத்துவமனை கட்டடங்கள் ரூ.130.27 கோடி மதிப்பிலும், குடியிருப்பு மற்றும் விடுதி கட்டடங்கள் ரூ.175.75 கோடி மதிப்பிலும் கட்டப்பட உள்ளன. சென்னையில் இருந்தவாறு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் மருத்துவமனை கல்லூரி கட்டடங்கள் கட்டுவதற்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், சுகாதாரத் துறை செயலாளா் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயண பாபு, துணை இயக்குநா் சபீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதேபோல, உதகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவீந்திரநாத், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் தவமணி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் சாந்தி ராமு, திராவிடமணி, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் கே.ஆா்.அா்ஜுனன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதைத் தொடா்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் பூமி பூஜையும் நடைபெற்றது.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

விரைவில் சூர்யா - 44 பெயர் டீசர்!

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT