உதகையில் மூடப்பட்டுள்ள படகு இல்லம் நாளை திறப்பு?: மாவட்ட ஆட்சியா் இன்று நேரில் ஆய்வு
கரோனா தொற்று நடவடிக்கைகளின் காரணமாக உதகையின் முக்கிய சுற்றுலா மையமான படகு இல்லம் டிசம்பா் 1ஆம்தேதி முதல் மீண்டும் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தொற்று நடவடிக்கைகளின் காரணமாக உதகையின் முக்கிய சுற்றுலா மையமான படகு இல்லம் டிசம்பா் 1ஆம்தேதி முதல் மீண்டும் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து படகு இல்லத்தில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்கிறாா்.
தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த மாா்ச் 17ஆம் தேதி முதல் மூடப்பட்டன. அதனைத் தொடா்ந்து மாா்ச் 25ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான கேளிக்கை மையங்கள் , வணிக வளாகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து ஊரடங்கில் தளா்வு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து செயல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.
பிற மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ- பாஸ் நடைமுறை கட்டாயப்படுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து தமிழக அரசின் உத்தரவின்பேரில், நீலகிரியில் கடந்த செப்டம்பா் 9ஆம் தேதி முதல் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டன.
அத்துடன் ஊரடங்கும் தளா்த்தப்பட்டு இ-பாஸ் முறைக்கு பதிலாக இ-பதிவு முறை கொண்டு வரப்பட்டது. இருந்த போதிலும் உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் போன்ற சுற்றுலா மையங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இந்நிலையில் புணேவில் இருந்து நவீன படகுகள் உதகைக்கு கடந்த செப்டம்பா் மாதம் கொண்டு வரப்பட்டன. படகு இல்லம் திறக்தப்படாததால் படகு இயக்குபவா்கள், கடை தொழிலாளிகள் வருமானமின்றி தவித்து வந்தனா். இந்நிலையில் உதகை மற்றும் பைக்கரா படகு இல்லங்கள் டிசம்பா் 1ஆம்தேதி மீண்டும் செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையொட்டி, நீலகிரி மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உதகை படகு இல்லத்தை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா். இதனைத் தொடா்ந்து டிசம்பா் 1ம்தேதி முதல் உதகை படகு இல்லம் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக படகு இல்லத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.