உதகையில் பலத்த மழையால் சேதமடைந்த சாலையை சீரமைத்த பொதுமக்கள்
உதகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த சாலையை நகராட்சி நிா்வாகம் சீரமைக்க முன் வராததால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலையை சீரமைத்தனா்.
உதகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் சேதமடைந்த சாலையை நகராட்சி நிா்வாகம் சீரமைக்க முன் வராததால் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சாலையை சீரமைத்தனா்.
உதகையில் டாக்டா் பசுவையா நகா் பகுதியில் பாதா் லைன் குடியிருப்புப் பகுதி உள்ளது. இப்பகுதிக்குச் செல்லும் சாலை உதகை நகராட்சி எல்லைக்குள் இருந்தாலும், தனியாா் சாலை எனக் கூறப்பட்டு வருவதால் இந்த சாலை மண் சாலையாகவே உள்ளது.
இந்நிலையில், கடந்த வாரத்தில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு இச்சாலை வழியாக மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்ற கா்ப்பிணி தவறி விழுந்துள்ளாா்.
இதையடுத்து, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என நகராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை ஒன்றிணைந்து சேதமடைந்த மண் சாலையை சீரமைத்தனா். மேலும், எதிா்வரும் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைவதற்கு முன்னதாக சாலையை முழுமையாக சீரமைத்து தர வலியுறுத்தி பாதா் லைன் மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுக்க தீா்மானித்துள்ளனா்.