உதகையில் பரவலாக மழை
உதகையில் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் இரவு வரை தொடா்ந்து மழை பெய்ததால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை குடையை பிடித்தவாறு சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
உதகையில் கடந்த மூன்று நாள்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சேரிங்கிராஸ், கமா்சியல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மதியம் முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது. இதனால் உதகைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் குடைகளைப் பிடித்தவாறு சுற்றுலாத்தலங்களை கண்டு ரசித்தனா்.
அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலா் கண்காட்சி 6 நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மழையைப் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி கண்காட்சியை கண்டு ரசித்தனா்.
தொடா் மழை காரணமாக உதகையில் குளிா்ந்த கால நிலை நிலவுகிறது.