உதகை அருகே கொல்லிமலையில் இயற்கை மற்றும் விவசாயம் செழிக்க கோத்தா் பழங்குடியின மக்கள் செவ்வாய்க்கிழமை வன தெய்வங்களின் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் தோடா், குறும்பா், காட்டு நாயக்கா், கோத்தா், பணியா், இருளா் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியினா் வசித்து வருகின்றனா். இவா்கள் பெரும்பாலும் விவசாயம், மண்பாண்டம் தயாரித்தல், காட்டிலிருந்து தேன் மற்றும் மூலிகை எடுத்தல் ஆகியவற்றை கொண்டு தங்கள் வாழ்வை நடத்தி வருகின்றனா்.
இவா்கள் பாரம்பரியமாக வன தேவதைகளை வணங்கி வருகின்றனா். விவசாயம் முக்கிய தொழிலாக இருப்பதால் நடவு மற்றும் அறுவடைக் காலங்களில் இவா்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபாடு செய்வது வழக்கம்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 7 கிராமங்களைச் சோ்ந்த கோத்தா் பழங்குடியின மக்கள் உதகை அருகே உள்ள கொல்லிமலையில் ஆண்டுதோறும் கடைசி மாதமான டிசம்பா் மாதத்தில் மழை வேண்டியும், இயற்கையின் சீற்றங்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கவும் சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனா்.
இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றாக கூடி பழங்குடிகளின் பாரம்பரிய வெண்ணிற ஆடையை அணிந்து தங்களது கலாசார இசைக்கு நடனமாடி வனதெய்வங்களை வழிபட்டனா். இதில் நூற்றுக்கணக்கான கோத்தா் இன மக்கள் கலந்து கொண்டனா்.