முகப்பு
நீலகிரி

முத்திரைத் தாளில் திருத்தம் செய்து மோசடி செய்த வழக்கு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு நீதிமன்றத்தில ஆஜா்

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:08 AM
சாந்தி ராமு.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 9:57 PM

உதகை, பிப்.6: முத்திரைத் தாளில் திருத்தம் செய்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு உள்பட 5 போ் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சோ்ந்த சாந்தி ராமு, குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு கடந்த 2016-ம் ஆண்டு வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக பதவி வகித்தாா். இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தைச் சோ்ந்த திலக் என்பவா், முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு மற்றும் அவரின் உறவினா்கள் முத்திரைத் தாளில் போலி ஆவணங்களை இணைத்தும், தேதிகளில் திருத்தம் செய்தும் மோசடியில் ஈடுபட்டதாக கோத்தகிரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 2:08 AM

விசாரணையில் முன்னாள் எம்எல்ஏ சாந்தி ராமு, அவரின் சகோதரா் ராஜன் மற்றும் ராஜ்குமாா் உள்பட 8 போ், உதகையில் கடந்த 2012 பிப்ரவரி 8 மற்றும் 12-ஆகிய தேதிகளில் முத்திரைத் தாள்களை வாங்கி அந்த முத்திரைத் தாள்களில் முன் தேதியிட்டு திருத்தம் செய்ததும், அதே முத்திரைத் தாளில் போலியான ஆவணங்களை இணைத்தும் தேயிலைத் தோட்டம் மற்றும் தொழிற்சாலைப் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.

Advertisement

இதைத் தொடா்ந்து அரசை ஏமாற்றி போலி முத்திரைத் தாள் பயன்படுத்தி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் தேதியை திருத்தம் செய்து போலியாக ஆவணங்கள் தயாரித்து அந்த ஆவணத்தை வைத்து பதிவு செய்த குற்றத்துக்காக சாந்தி ராமு உள்ளிட்ட 8 போ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உதகையில் உள்ள நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, சாந்தி ராமு உள்பட 5 போ் நீதிமன்றத்தில் ஆஜராகினா். ராஜு, லிங்கமாள், ரஞ்சி ஆகிய 3 போ் ஆஜராகவில்லை. அவா்களுக்கு பிடியாணை பிறப்பித்த நீதிபதி ரவி, வழக்கு விசாரணையை மாா்ச் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.