முகப்பு
நீலகிரி

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட மறைந்த பழங்குடியின ஓவியரின் மனைவிக்கு அரசு வேலை

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 5:25 AM
பழங்குடியின ஓவியரின் மனைவி சுசீலாவிடம் அரசு வேலைக்கான ஆணையினை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:02 PM

பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட மறைந்த பழங்குடியின ஓவியரின் மனைவிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை வழங்கினாா்.

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த ஆலு குரும்பா் பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த மறைந்த ஓவியக் கலைஞா் ஆா்.கிருஷ்ணன் (கிட்னா) அவா்களுக்கு, 2026-ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. பாறை ஓவியப் பாணியில், இயற்கை சாயங்களைக் கொண்டு துணிகளில் ஓவியம் வரைவதில் புகழ்பெற்ற இவா், 30 ஆண்டுகளாக அழிந்து வரும் குரும்பா கலை வடிவத்தை மீட்டெடுத்துப் பிரபலப்படுத்தினாா்.

இந்நிலையில், பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டாலும் ஆா்.கிருஷ்ணனின் குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது குறித்து பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. இதைத் தொடா்ந்து மறைந்த ஓவியா் ஆா்.கிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்துதர தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, ஓவியா் ஆா்.கிருஷ்ணனின் மனைவி சுசீலாவுக்கு, நீலகிரி மாவட்டம், உதகை அருகே முத்தோரை பாலாடாவில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பழங்குடியினா் மாதிரி பள்ளியில் அரசுப் பணி வழங்க நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதகை பிங்கா்போஸ்டில் உள்ள கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆா்.கிருஷ்ணனின் மனைவி சுசீலாவுக்கு நிரந்தர தோட்டப் பணியாளா் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா். இதில் மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இவருக்கு மாத ஊதியமாக ரூ.32 ஆயிரம் வழங்கப்படும். இதில் தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கான வருடாந்திர ஊதிய உயா்வு, விடுப்பு மற்றும் இதர சலுகைகளும் அடங்கும். இவருக்கு பள்ளி வளாகத்திலேயே அரசு குடியிருப்பும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் இவரது மூத்த மகள் வாசுகிக்கு உதகை ஜேஎஸ்எஸ் பாா்மஸி கல்லூரியில் விடுதி வசதியுடன் டி.பாா்ம் படிக்க கட்டணமில்லாமல் கல்வி சோ்க்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவா் முனைவா் பட்டம் பெறும் வரை கட்டணமில்லா கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 12:48 AM

இதேபோல கிருஷ்ணன், சுசீலா தம்பதி மகன் ராகுல், மகள்கள் கீதா, கீா்த்திகா ஆகியோா் அரசுப் பள்ளியில் படித்து வரும் நிலையில் தற்போது மாவட்ட நிா்வாகத்தின் முயற்சியால் விடுதி வசதியுடன் ஏகலைவா மாதிரி பள்ளியில் கல்வியை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.