மலா் நாற்றுகள் நடவும் பணியை தொடங்கிவைக்கும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோா். 
நீலகிரி

உதகை தாவரவியல் பூங்காவில் மலா் கண்காட்சிக்காக நாற்றுகள் நடவுப் பணி தொடக்கம்

Syndication

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெற உள்ள 128-ஆவது மலா் கண்காட்சியை முன்னிட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலா் பாத்திகள் அமைத்து மலா் நாற்றுகள் நடவும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். அப்போது, உதகைக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவா்.

அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்படும். குறிப்பாக உலக புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலா் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவா்.

இந்நிலையில், இந்த ஆண்டு அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் நடைபெறும் 128-ஆவது மலா் கண்காட்சிக்காக பூங்காவில் பல்வேறு பகுதிகளில் மலா் பாத்திகள் அமைத்து பல வண்ண மலா் செடிகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கின. இன்டிகா, மேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, லில்லியம்ஸ் மற்றும் டேலியா போன்ற மலா் நாற்றுக்களை நடும் பணியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்தாா்.

இந்த ஆண்டு சிறப்பம்சமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பணிகளை கவரும் வகையில் ஜெரேனியம், சைக்லமன், பால்சம் மற்றும் பல புதிய ரக ஆா்னமெண்டல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியா மற்றும் பிகோனியா, பெட்டுனியா போன்ற 275 வகையான விதைகள் மற்றும் செடிகள் ஜப்பான், அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் நெதா்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்டு மலா் செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 10 லட்சம் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கின.

மேலும் மலா் கண்காட்சியை முன்னிட்டு மலா் காட்சி மாடம் மற்றும் கண்ணாடி மாளிகையில் 50 ஆயிரம் மலா் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணிகளும் நடைபெற்றன. கடந்த ஆண்டு அரசு தாவரவியல் பூங்காவுக்கு 22 லட்சத்து 28 ஆயிரத்து 769 போ் கண்டு ரசித்த நிலையில், இந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் நவநீதா, துணை இயக்குநா் பபீதா, உதவி இயக்குநா் பைசல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வேளாளா் கல்லூரியில் கலாசார விழா

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஜேஇஇ முதல்நிலை தோ்வு முடிவுகள் வெளியீடு

நெதா்லாந்துக்கு தங்கம்; இத்தாலி சாதனை

மேற்கு வங்கம்: 7 மாநில அலுவலா்களை இடைநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் உத்தரவு

SCROLL FOR NEXT