குன்னூா் அருகே வீட்டின் மாடிப் படி ஏறி வளா்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தையின் சிசிடிவி காட்சிகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விலங்குகள் இரை தேடி குடியிருப்புகளுக்கு வருவது வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில் குன்னூா் நகரின் மையப் பகுதியில் உள்ள டென்ட் ஹில் குடியிருப்பு வளாகத்துக்கு கடந்த 17-ஆம் தேதி வந்த சிறுத்தை, அங்கு உறங்கிக் கொண்டிருந்த நாயை கவ்விச் சென்றுள்ளது.
இதையடுத்து நாய் மாயமானது குறித்து சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா், சிசிடிவி கேமரா பதிவுகளை திங்கள்கிழமை பாா்த்தபோது, சிறுத்தை கவ்விச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அரசுப் பள்ளி, தனியாா் மற்றும் காவலா் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வளா்ப்பு நாயை சிறுத்தை கவ்விச் சென்ற சம்பவம், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, வனத் துறையினா் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.