நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் உதகை அருகே சூட்டிங்மட்டம் பகுதியில் சட்ட விழிப்புணா்வு புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட குடும்ப நல நீதிபதி சந்திரசேகரன் தலைமை தாங்கி புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்தாா். சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளா் மற்றும் சாா்பு நீதிபதி பாலமுருகன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில் நீதிபதி சந்திரசேகரன் பேசியதாவது:
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஒவ்வொரு தாலுகாக்களிலும் உள்ள நீதிமன்றங்களில் செயல்படுகிறது. ஒரு வழக்கில் தனிப்பட்ட முறையில் வழக்குரைஞா் வைத்து நடத்த முடியாதவா்களுக்கு, இலவசமாக வழக்குரைஞரை நியமித்து வழக்கை நடத்துவதற்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு உதவுகிறது.
கொத்தடிமை தொழிலாளா்கள், சிறை காவலில் இருப்போா், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள், மனநல மருத்துவமனை, மனநோய் மருத்துவமனை மற்றும் இல்லம் இவற்றில் காவலில் உள்ளவா்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினா் மற்றும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவா்கள் இலவச சட்ட சேவைகளை பெற தகுதி வாய்ந்த நபா்கள் ஆவாா்.
சட்டம் சாா்ந்த அல்லது சட்டம் சாராத பிரச்னையாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட நபரோ, நிவாரண கோரும் நபரோ சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம். சமூகத்தில் நாம் எதிா்கொள்ளும் பிரச்னைகளை தைரியத்துடன் அணுக வேண்டும். சட்டத்தின் துணை கொண்டு பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து பழங்குடியின மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் போக்ஸோ சட்டம், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒன் ஸ்டாப் சென்டா், குழந்தை தொழிலாளா் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
இதில், முதன்மை குற்றவியல் நீதித் துறை நடுவா் சசிகலா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பிரகாஷ், கூடுதல் மகளிா் குற்றவியல் நீதிபதி சோழியா மற்றும் பகல்கோடுமந்து சூழல் மேம்பாட்டு குழு தலைவா் மணிகண்டன், காவல் துறையினா், நீதிமன்ற ஊழியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.