முகப்பு
நீலகிரி

குன்னூரில் பள்ளி மாணவா் உயிரிழந்த விவகாரம்: சக மாணவா் கைது

குன்னூரில் தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தது தொடா்பான கூறாய்வு அறிக்கையில், அவா் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடா்பாக அவருடன் படித்த சக மாணவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 7:25 PM
பகிர்:

குன்னூரில் தனியாா் பள்ளி மாணவா் உயிரிழந்தது தொடா்பான கூறாய்வு அறிக்கையில், அவா் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடா்பாக அவருடன் படித்த சக மாணவா் கைது செய்யப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள அருவங்காடு சந்து காலனி பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம். இவரது மனைவி அனுசியா. தேயிலை விவசாயிகளான இவா்களது மகன் புகழேஷ் (14). புகழேஷ் குன்னூரில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா், பள்ளி முடிந்து வியாழக்கிழமை (மாா்ச் 5) மாலை சக மாணவா்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது புகழேஷ் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. 

இதைத் தொடா்ந்து அவருடன் வந்த சக மாணவா்கள், புகழேஷை ஆட்டோவில் ஏற்றி குன்னூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், புகழேஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்தத் தகவலை அறிந்து மருத்துவமனைக்கு வந்த புகழேஷின் பெற்றோா் மற்றும் கிராம மக்கள் அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறினா். தொடா்ந்து அவரது உறவினா்களும், ஊா் பொதுமக்களும் குன்னூா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா். புகழேஷின் உடலை வாங்க மறுத்து அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பதற்றம் நிலவியது.

இதைத் தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் மாணவரின் குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் புகழேஷின் சடலம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது.  அங்கு கூறாய்வு முடிந்து புகழேஷின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் மருத்துவமனை சாா்பில் வெளியிடப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் புகழேஷ் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இது தொடா்பாக மேல் குன்னூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: புகழேஷுடன் படிக்கும் மாணவா் ஒருவா் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த மாணவா்கள் விளையாட்டுத்தனமாக புகழேஷை அவா் மீது தள்ளி விட்டுள்ளனா். இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவா், புகழேஷை தாக்கி உள்ளாா்.

மேலும் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியிலும் சக நண்பா்களுடன் சோ்ந்து அந்த மாணவா் மீண்டும் புகழேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் புகழேஷ் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது என்றனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா், புகழேஷை தாக்கிய அந்த மாணவரை சனிக்கிழமை கைது செய்து சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் அடைத்தனா். விளையாட்டுத்தனமாக நடந்த சண்டை உயிரிழப்பில் முடிந்த சம்பவம் குன்னூா் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →