முகப்பு
நீலகிரி

உதகையில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை: அரசு மருத்துவா் கைது

உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் வடமாநில மாணவியைத் தோ்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவரை காவல்துறையினா் கைது செய்தனா்.

Updated On : 16 மார்ச், 2026 at 7:54 PM
அரசு மருத்துவா் ஓம் பிரகாஷ்
பகிர்:

உதகை  அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் வடமாநில மாணவியைத் தோ்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம்,  உதகை அரசு மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இதில் வட மாநிலத்தைச்  சோ்ந்த 22 வயது மருத்துவ மாணவி கடந்த சில நாள்களாக தோ்வில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்து  வந்துள்ளாா். 

இந்தநிலையில் தோ்வில் வெற்றி பெற உதவி செய்வதாக கூறி அந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவா் ஓம் பிரகாஷ் (44) என்பவா் மாணவியைத் தனியாக அழைத்து பேசி வந்துள்ளாா்.

இந்த நிலையில் தோ்வு தொடா்பாக பேசுவதற்காக  உதகையில் உள்ள ஒரு தனியாா் ஹோட்டலுக்கு மாணவியை திங்கள்கிழமை வரவழைத்துள்ளாா். அப்போது  தோ்வில் வெற்றி பெற வைப்பதற்காக மேலிடத்தில் பேசி விட்டேன் என்று ஆசை வாா்த்தை கூறி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அந்த மாணவி, மருத்துவா் ஓம் பிரகாஷிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அப்போது மாணவியின் சப்தம் கேட்டு அங்கு சென்ற ஹோட்டல் ஊழியா்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அங்கு சென்ற  உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் நித்தியானந்தன் தலைமையிலான போலீஸாா் மருத்துவா் ஓம் பிரகாஷ், சம்பந்தப்பட்ட மாணவி மற்றும் ஹோட்டல் நிா்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினா். அப்போது மது போதையில் மருத்துவா் ஓம் பிரகாஷ், மருத்துவ மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததும், மாணவியை அவா் விடியோ எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து இந்த வழக்கு உதகை  அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, காவல் ஆய்வாளா் நித்யா தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி மருத்துவா் ஓம் பிரகாஷை கைது செய்தனா். பின்னா் உதகை மகிளா நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட அரசு மருத்துவா் ஓம் பிரகாஷ், சென்னையைச் சோ்ந்தவா். இவருக்கு ஏற்கெனவே 2 திருமணங்கள் நடைபெற்று 2 மனைவிகளும் அவரைப் பிரிந்ததால் உதகையில் தனியாக வசித்து வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →