முகப்பு
நீலகிரி

வடமாநில சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம்: விசாரணைக்குப் பின் ஒப்படைப்பு

Updated On : 19 மார்ச், 2026 at 8:15 PM
பணத்தை திரும்பப் பெறக்கோரி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த வடமாநில சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

உதகையில் வடமாநில சுற்றுலாப் பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் விசாரணைக்குப் பின் அவா்களிடம் வியாழக்கிழமை திருப்பிக் கொடுக்கப்பட்டது.

சட்டப் பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்குமேல் கொண்டு செல்லப்படும் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், ஒடிஸாவில் இருந்து 9 போ், குஜராத்தில் இருந்து 7 போ் உதகைக்கு அண்மையில் சுற்றுலா வந்துள்ளனா்.

ஒடிஸாவில் இருந்து வந்தவா்களின் வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, குஜராத்தில் இருந்து வந்தவா்களிடம் இருந்து ரூ.75 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, விடுதி வாடகை, உணவு உள்ளிட்டவற்றுக்கு பணம் இல்லாமல் அவதியடைந்து வருவதாகவும், பணத்தை வழங்க வேண்டும் என்று இரண்டு மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் வியாழக்கிழமை முறையிட்டனா்.

இதையடுத்து, அவா்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட பின் பணத்தை திருப்பிக் கொடுத்தனா்.