பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்: மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்
தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரத்து 802 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வெழுதுகின்றனர்.
தமிழகத்தில் வியாழக்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 25 ஆயிரத்து 802 மாணவ, மாணவியர் பங்கேற்று தேர்வெழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையால் நடத்தப்படும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இத்தேர்வினை திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் 77 தேர்வு மையங்களில் 198 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11,212 மாணவர்களும், 13,607 மாணவிகளும் என மொத்தம் 24,819 பேர் எழுதுகின்றனர். தனித் தேர்வர்களாக 983 பேர் எழுதவுள்ளனர்.
தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 77 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர் கூடுதல் துறை அலுவலர்களாக 87 ஆசிரியர்களும், அறைக் கண்காணிப்பாளர்களாக 1,504 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வுகளில் முறைகேடு செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வி அலுவலர்கள் தலைமைகளில் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வுக்காக முதன்மைக் கல்வி அலுவலர் மூலமாக 176 ஆசிரியர்களைக் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பறக்கும் படையினர் தங்கள் ஆலோசனைகளைப் பதிவு செய்ய பதிவேடு ஒன்றும், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் புகார் பெட்டியும் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் பார்வையிட்டு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.