திருப்பூர்

குண்டடம் பிஏபி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வேண்டும்: பாசன சங்கத் தலைவர் கோரிக்கை

DIN

தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டதற்காக குண்டடம் பிஏபி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திவர்களைக் கைது செய்ய வேண்டும் என பாசன சங்கத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
பிஏபி பாசனத் திட்டத்தில் மொத்தம் 4 லட்சம் ஏக்கர்கள் உள்ளன. இவை நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் பாசனத்துக்குத் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மண்டலத்திலும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர்களுக்கு முறையாக தண்ணீர் விடப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து, 4 ஆம் சுற்றுத் தண்ணீர் திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பிஏபி பிரதானக் கால்வாயில் ஆங்காங்கே குழாய்கள் பதிக்கப்பட்டு தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, குண்டடம், காங்கயம், பொங்கலூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. எனவே, தண்ணீர் திருட்டை தடுக்க வருவாய்த் துறை, பொதுப் பணித் துறை, காவல் துறை அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டன. 
இந்நிலையில், குண்டடம் வட்டம் ருத்ராவதி பகுதியில் பிரதான கால்வாயில் தண்ணீர் திருட்டை தடுக்கும் வகையில் பிஏபி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது, பிரதான கால்வாயின் கரைகளில் போடப்பட்டிருந்த சைடு போர் ஓட்டைகளை அடைத்தும், அங்கு பதிக்கப்பட்டிருந்த குழாய்களைப் பறிமுதல் செய்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த தண்ணீர் திருடும் கும்பல் கடந்த சில நாள்களுக்கு முன்னர் குண்டடத்தில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தை இரவு நேரத்தில் தாக்கியுள்ளனர். இதனால், பிஏபி அதிகாரிகள் பீதியடைந்து பணிக்குச் செல்ல மறுத்து வருகின்றனர். மேலும் இந்தத் தாக்குதல் குறித்து பிஏபி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கூறியுள்ளனர். 
இந்நிலையில், பிஏபி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என பாசன விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இது குறித்து உடுக்கம்பாளையம் நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் பரமசிவம் திங்கள்கிழமை கூறியது:
பிஏபி திட்டத்தில் கடைமடைகளுக்கு தண்ணீர் செல்வதில்லை என நீண்ட காலமாக புகார்கள் இருந்து வந்தன. இந்நிலையில், குண்டடம் ருத்ராவதி பகுதியில் தண்ணீர் திருட்டை தடுக்க பிஏபி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். 
பிஏபி மூன்றாம் மண்டல பாசனத்தில் 4 ஆம் சுற்றுத் தண்ணீர் திறக்க உள்ள சூழ்நிலையில் தண்ணீர் திருட்டைத் தடுக்க நடவடிக்கைகளை எடுத்த பிஏபி அதிகாரிகளை மர்ம நபர்கள் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்தும்,  குண்டடத்தில் உள்ள பிஏபி அலுவலகத்தை அடித்து நொறுக்கியும் உள்ளனர். தண்ணீர் திருட்டை தடுக்க எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்கிற எண்ணத்தில் குண்டர்களை வைத்து ஒரு கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பிஏபி அதிகாரிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், பிஏபி அலுவலகத்தை தாக்கியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையென்றால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பிஏபி விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT