திருப்பூர்

தலைக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை: திருப்பூர் எஸ்.பி. எச்சரிக்கை

DIN

இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட காவல் துறை ஆகியவை சார்பில் பல்லடம் அருகே சின்னக்கரையில் ராயல் கிளாசிக் பின்னலாடை நிறுவனத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் பேசியதாவது:
வாகனங்களை ஓட்டும்போது பாதுகாப்போடு இயக்க வேண்டும். குடும்பத்தை நினைவில் வைத்து வாகனத்தை வேகமின்றி நிதானமாக இயக்க வேண்டும். பின்னலாடை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு முகாம் நடத்தி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு எல்.எல்.ஆர். பதிவு செய்து கொடுத்து  பயிற்சிக்கு பின்னர் தேர்ச்சி பெறுவோருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க தயாராகவுள்ளோம். அதிக அளவு தொழிலாளர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்கள் எங்களை அணுகி சிறப்பு முகாம் நடத்தி பயன் பெறலாம் என்றார். 
முகாமில் பின்னலாடை நிறுவனத் தொழிலாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி பேசியதாவது: 
சாலை விபத்துகள் தற்போது அதிகரித்துவிட்டன. விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்புகளைத் தடுக்க காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். வாகன ஓட்டுநர்கள் பொறுப்புணர்வோடு வேகமாக வாகனத்தை ஓட்டாமல் விவேகத்துடன் இயக்கினால் விபத்துகளை தவிர்க்கலாம். 
திருப்பூர் மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டில் 1196 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில் 249 பேர் உயிரிழந்துள்ளனர். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள்தான் அதிக அளவு உயிரிழந்துள்ளனர். வாகனம் ஓட்டும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். வாகன ஓட்டுநர்கள் தங்களது குடும்பத்தை நினைவில் வைத்து தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும். 
குடும்பத்தில் வருமானம் ஈட்டுவோர் உயிரிழந்தால் ஒட்டு மொத்த குடும்பத்தின் பொருளாதாரமே பாதிக்கும். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓட்டினால் அவர்கள் மீது ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட  கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் திடீர் சோதனைகள் அடிக்கடி மேற்கொள்ளப்படும் என்றார். 
நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் பாஸ்கர், கோகுலகிருஷ்ணன், பல்லடம் காவல் ஆய்வாளர்கள் திருநாவுகரசு, சரவணன், பின்னலாடை நிறுவன மேலாளர்கள் வெங்கடாசலபதி, கருப்புசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT