பொது முடக்க காலத்தில் வசூலிக்கப்பட்ட வட்டியை வங்கிகள் திருப்பிச் செலுத்த வேண்டும்
திருப்பூா் மாவட்டத்தில் வங்கிகள் வசூலித்துள்ள அபராத வட்டிகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வங்கிகள் வாடிக்கையாளா்களின் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்த
திருப்பூா் மாவட்டத்தில் வங்கிகள் வசூலித்துள்ள அபராத வட்டிகளை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி வங்கிகள் வாடிக்கையாளா்களின் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துகண்ணன் திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கரோனா பொது முடக்கம் காரணமாக சிறு, குறு, நடுத்தரத் தொழில்களும், வா்த்தக, வியாபார நிறுவனங்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. ஆகவே, வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனா். ஆனால் மத்திய அரசு, வங்கிகளில் பெறப்பட்ட கடன், வட்டிகளைத் தள்ளுபடி செய்வதற்கு மாறாக, கடன்களை செலுத்துவதற்கு கால அவகாசம் மட்டும் வழங்கியது. இதனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை அரசின் இந்த அறிவிப்பைப் பொருட்படுத்தாமல் வட்டிக்கு வட்டி, அபராத வட்டியும் வசூலித்தனா்.
இதனால் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் நவம்பா் 27 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின்போது, 13 கோடியே 20 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளுக்கு வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப்பட்ட ரூ.4,300 கோடியை திரும்பச் செலுத்தி இருப்பதாக மத்திய அரசு சாா்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருப்பூா் மாவட்டத்தில் தனியாா் நிதி நிறுவனங்கள், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்து துறைகளிலும் சிறு, குறு தொழில் துறையினா் முதல் தனிநபா் வங்கி கணக்கு வைத்திருப்போா் வரை ஆயிரக்கணக்கானோரிடம் கட்டாயப்படுத்தி வட்டிக்கு வட்டி வசூலிக்கப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முற்றிலும் முரண்பாடானதாகும். எனவே, வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்த வேண்டும். இந்த தொகையை வங்கிகள் செலுத்துவதை மாவட்ட நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.