முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் முடிவு

திருப்பூரில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை மாலையில் முடிவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உயர்மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்
பகிர்:

திருப்பூர்: திருப்பூரில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதால் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை மாலையில் முடிவடைந்தது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, தாராபுரம் வட்டம் ஆலாம்பாளையம் ஆகிய இரு இடங்களில் உயர் மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கடந்த புதன்கிழமை காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினர்.

இதில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் கவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள 765 கிலோ வாட் உயர்மின் கோபுரம் திட்டத்தை எதிர்த்தும், இந்திய தந்தி சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் வரும் உயர்நீதிமன்றத்தில் நவம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆகவே, அதுவரையில் தனியார் நிறுவனத்துக்கு பணிகளை மேற்கொள்ள வரைமுன் நுழைவு அனுமதி கொடுக்கக் கூடாது. மேலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள முன் நுழைவு அனுமதி திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த இரு இடங்களிலும் 6 ஆவது நாளாக திங்கள்கிழமையும் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர்.

கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை: இதனிடையே, திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன், கோட்டாட்சியர் ஜெகநாதன், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார் ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மேற்கண்ட திட்டப்பணிக்காக மாவட்ட நிர்வாகத்தால் தனியார் நிறுவனத்துக்கு நவம்பர் 27 ஆம் தேதி வரையில் முன் நுழைவு அனுமதி வழங்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது. இதன் பேரில் போராட்டத்தைக் கைவிடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உயர் மின் கோபுர திட்டங்களால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து 6 நாள்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.